5-வது டெஸ்டில் அஸ்வின் ஏன் இல்லை?: டிராவிட் பதில்

5-வது டெஸ்டில் அஸ்வின் இடம்பெறாதது பற்றி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார். 
5-வது டெஸ்டில் அஸ்வின் ஏன் இல்லை?: டிராவிட் பதில்
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் அஸ்வின் இடம்பெறாதது பற்றி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது.

5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜோ ரூட், பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு மறக்க முடியாத வெற்றியை வழங்கினார்கள். 76.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது இங்கிலாந்து அணி. ஜோ ரூட் 142, பேர்ஸ்டோ 114 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆனது. 2007-க்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தது. ஆனால் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும் மிகச் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணி 5-வது டெஸ்டை வெல்ல உதவினார்கள். 

இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு அஸ்வினை அணியில் சேர்க்காதது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். செய்தியாளர் சந்திப்பில் ராகுல் டிராவிட் பதில் அளித்ததாவது:

இப்போது அணியின் தேர்வு பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஷர்துல் தாக்குர் நன்றாக விளையாடியவர். டெஸ்டில் அஸ்வின் போன்ற ஒரு வீரரைச் சேர்க்காமல் இருப்பது எப்போதும் சுலபமல்ல. முதல்நாளன்று ஆடுகளத்தைப் பார்த்தபோது ஏராளமான புற்களால் அது மூடப்பட்டிருந்தது. எனவே ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு உகந்ததாக இருக்கும் எனக் கருதினோம். கடைசி நாளன்று கூட ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதாக இல்லை. ஜடேஜா, ஜேக் லீச் என இருவருக்கும் அப்படித்தான் இருந்தது. ஆரம்பத்தில் மழை பெய்தது. வெயில் நீண்ட நேரம் இல்லை. இதன் காரணமாகவும் ஆடுகளத்தின் தன்மை அப்படி இருந்திருக்கலாம். நாங்கள் நினைத்தபோல ஆடுகளத்தில் பிளவு ஏற்படவில்லை. 5-வது நாளன்று வந்து இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் விளையாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனக் கூறலாம். ஆனால் அதற்கு ஏற்றாற்போல ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக மாறவில்லை என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com