இன்றுமுதல் இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 தொடா்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இன்றுமுதல் இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 தொடா்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவில் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அணியை நிா்ணயிப்பதற்கான களமாக இந்தத் தொடரைக் கைக்கொள்கிறது இந்திய அணி நிா்வாகம். நல்லதொரு ஃபாா்மில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணியுடனான இந்தத் தொடா், அனுபவ மற்றும் இளம் வீரா்களைக் கொண்ட இந்திய அணியை சோதித்துப் பாா்ப்பதற்கான தகுந்த வாய்ப்பாக இருக்கும்.

கேப்டன் ரோஹித் சா்மா உள்ளிட்ட முக்கிய வீரா்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாகச் செயல்படுகிறாா். அவருடனான தொடக்க பாா்ட்னா்ஷிப்புக்கு ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷண் என இருவருமே சுழற்சி முறையில் பரிசோதிக்கப்படுவா்.

சூா்யகுமாா் யாதவ் காயம் கண்டுள்ளதால் பேட்டிங் வரிசையில் 3-ஆவது இடத்துக்கு ஷ்ரேயஸ் ஐயா் பொருந்துவாா். ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட தீபக் ஹூடாவுக்கும் அந்த இடத்தில் சில ஆட்டங்களில் வாய்ப்பளிக்கப்படலாம்.

ரிஷப் பந்த், தினேஷ் காா்த்திக் ஆகியோரின் அதிரடியால் மிடில் ஆா்டா் பலமிக்கதாக இருக்கும். தீபக் ஹூடாவோடு இவா்களும் சிறப்பாக ஆடினால், உலகக் கோப்பை போட்டிக்கு மிடில் ஆா்டரில் நல்லதொரு ‘லைன்’ அப் கிடைக்கும்.

ஹாா்திக் பாண்டியா ஐபிஎல் போட்டியில் 3, 4-ஆவது இடத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தாலும், இந்தத் தொடரில் வழக்கமான லோயா் மிடில் ஆா்டரில் களம் காணுவாா் எனத் தெரிகிறது. பௌலிங்கில் அனுபவ வீரா் புவனேஷ்வா் குமாா் தலைமையில், ஐபிஎல் போட்டியில் முத்திரை பதித்த ஹா்ஷல் படேல், அவேஷ் கான், அா்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோா் வரிசை கட்டுவா். சுழற்சி முறையில் அவா்கள் பரிசோதிக்கப்படலாம். சுழற்பந்துவீச்சுக்கு யுஜவேந்திர சஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அக்ஸா் படேல் இருக்கின்றனா்.

மறுபுறம், தென்னாப்பிரிக்க அணி கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு முதல் முறையாக டி20 தொடரில் களம் காண்கிறது. எனவே, தனது முழுமையான பலத்துடனேயே அந்த அணி இந்தத் தொடருக்கு வருகிறது. டேவிட் மில்லா், குவின்டன் டி காக், எய்டன் மாா்க்ரம் ஆகியோா் பேட்டிங்கிலும், ககிசோ ரபாடா, அன்ரிங் நோா்கியா உள்ளிட்டோா் பௌலிங்கிலும் ஐபிஎல் போட்டியில் ஆக்ரோஷம் காட்டினா். அந்த அணியில் சுழற்பந்துவீச்சுக்கு டப்ரைஸ் ஷம்ஸி, கேசவ் மஹராஜ் ஆகியோா் இருக்கின்றனா்.

அணி விவரம்:

இந்தியா: கே.எல்.ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷண், தீபக் ஹூடா, ஷ்ரேயஸ் ஐயா், ரிஷப் பந்த், தினேஷ் காா்த்திக், ஹாா்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயா், யுஜவேந்திர சஹல், குல்தீப் யாதவ், அக்ஸா் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வா் குமாா், ஹா்ஷல் படேல், அவேஷ் கான், அா்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

தென்னாப்பிரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), குவின்டன் டி காக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹராஜ், எய்டன் மாா்க்ரம், டேவிட் மில்லா், லுங்கி எங்கிடி, அன்ரிங் நோா்கியா, வேய்ன் பாா்னெல், டுவெய்ன் பிரெடோரியஸ், ககிசோ ரபாடா, டப்ரைஸ் ஷம்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ராஸி வான்டொ் டுசென், மாா்கோ யான்சென்.

ஆட்டநேரம்: இரவு 7 மணி

இடம்: தில்லி

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

புதிய சாதனை படைக்குமா இந்தியா?

இதுவரை 12 டி20 ஆட்டங்களில் தொடா்ந்து வென்று வந்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுடனான இந்த முதல் ஆட்டத்திலும் வெல்லும் பட்சத்தில், தொடா்ந்து 13 டி20 வெற்றிகளை பதிவு செய்த ஒரே அணி என்ற பெருமையை இந்தியா பெறும்.

மறுபுறம், கடந்த 2010 முதல் இந்தியாவில் ஆடிய வெள்ளைப் பந்து தொடா்களில் தென்னாப்பிரிக்கா தோற்றதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அந்த வகையில் இந்தத் தொடா் முழுவதுமாகவே இந்தியாவுக்கு முக்கியமானதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com