இந்திய அணியில் இடமில்லை: நள்ளிரவில் வேதனையை வெளிப்படுத்திய தெவாதியா
By DIN | Published On : 16th June 2022 02:02 PM | Last Updated : 16th June 2022 02:02 PM | அ+அ அ- |

இந்திய டி20 அணியில் இடம்பெறாத வருத்ததை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார் ராகுல் தெவாதியா.
ஐபிஎல் முடிந்த பிறகு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதன்பிறகு இந்திய அணி அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் சுற்றுப்பயணம் செய்கிறது. அயர்லாந்தில் ஜூன் 26, 28 தேதிகளில் இரு டி20 ஆட்டங்களை விளையாடுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5-வது டெஸ்ட், இந்த வருடம் நடைபெறுகிறது. அயர்லாந்து டி20 தொடருக்கான புதிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
ஐபிஎல் போட்டியில் பல ஆட்டங்களில் கடைசிக்கட்டங்களில் அதிரடியாக விளையாடி குஜராத் அணிக்கு வெற்றிகளைக் கொடுத்த ஆல்ரவுண்டர் ராகுல் தெவாதியாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
எதிர்பார்ப்புகள் வேதனையளிக்கின்றன என்று நள்ளிரவு 12.53-க்கு ட்வீட் செய்துள்ளார் தெவாதியா. இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறும்விதமாக ட்வீட் செய்துள்ளார்கள்.
ஐபிஎல் 2022 போட்டியில் 16 ஆட்டங்களில் 217 ரன்கள் எடுத்தார் தெவாதியா. ஸ்டிரைக் ரேட் - 147.62. பஞ்சாப் அணிக்கு எதிராகக் கடைசி இரு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டபோது இரு சிக்ஸர்கள் அடித்து அசத்தினார் தெவாதியா.
Expectations hurts
— Rahul Tewatia (@rahultewatia02) June 15, 2022