தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி குஜராத்தில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சினை தேர்வு செய்தார். 

இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களில் லுங்கி இங்கிடி வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் நீண்ட நேரம் நிலைக்க வில்லை. அவர் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 24 ரன்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் 27 ரன்களில் ஆட்டமிழந்து அவர் வெளியேறினார். இதனால் 40 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலை உருவானது. அதன்பின், கேப்டன் ரிஷப் பந்துடன் ஜோடி சேர்ந்தார் ஹார்திக் பாண்டியா.

இந்த இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் ஸ்கோரினை உயர்த்தும் முயற்சியில் இறங்கியது. நிதானமாக விளையாடிய இந்த இணை ஓரளவிற்கு இந்திய அணியின் ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்தியது. ஹார்திக் பாண்டியா ஷம்சி வீசிய பந்தில் தொடர்ச்சியாக 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். நிதானமாக ஆடிய கேப்டன் ரிஷப் பந்த் 17 ரன்களில் கேசவ் மகாராஜ் சுழலில் வீழ்ந்தார்.

இதனையடுத்து, ஹார்திக் பாண்டியாவுடன்  அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்தி 26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். பிரிடோரியஸ் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்த தினேஷ் கார்த்தி அடுத்த பந்தில் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தார். அவர் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் குவித்துள்ளது.

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய குயிண்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் காயம் காரணமாக டெம்பா ரிட்டயர்ட் ஹட் வாங்கி பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் ஆடிய டி காக் ரன் ஒவுட் ஆனதும் தென்னாப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறத் துவங்கியது. இறுதியில், 16.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 87 ரன்களில் தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக, அந்த அணியில் ராஸி வான்டர் டஸ்ஸன் 20 ரன்கள் எடுத்தார்.

அபாரமாக பந்துவீசிய இந்திய அணியின் ஆவேஸ் கான் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். சஹால் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இதன் காரணமாக, 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-2 என்கிற அளவில் இரு அணிகளும் சரிசமமான வெற்றிகளைப் பெற்றுள்ளன. இறுதி ஆட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com