அணியிலிருந்து யாரையும் நீக்குவதில்லை: டிராவிடைப் பாராட்டும் வீரர்

கடந்த மூன்று ஆட்டங்களில் ஒரு விக்கெட்டும் எடுக்காததால் எனக்கு அழுத்தம் இருந்தது...
அணியிலிருந்து யாரையும் நீக்குவதில்லை: டிராவிடைப் பாராட்டும் வீரர்

ஓரிரு ஆட்டங்களில் மோசமாக விளையாடினாலும் எந்த வீரரையும் அணியிலிருந்து நீக்குவதில்லை என இந்திய வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சோ்த்தது. அடுத்து தென்னாப்பிரிக்கா 16.5 ஓவா்களில் 87 ரன்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆட்டமிழந்தது. அணியின் கேப்டன் பவுமா ‘ரிடையா்டு ஹா்ட்’ ஆகியிருந்தாா். இந்த ஆட்டத்தில் இந்தியாவின் இன்னிங்ஸில் தடுமாற்றத்தில் இருந்தபோது ஹாா்திக் பாண்டியா - தினேஷ் காா்த்திக் கூட்டணி அசத்தலாக விளையாடி ஸ்கோரை உயா்த்தியது. தனது முதல் டி20 அரை சதத்தை எடுத்த தினேஷ் கார்த்திக், 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். பாண்டியா 46 ரன்கள் எடுத்தார். அவேஷ் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் தற்போது 2-2 என சமநிலையில் உள்ளது. கடைசி டி20 ஆட்டம் நாளை பெங்களூரில் நடைபெறவுள்ளது.

4 விக்கெட்டுகள் எடுத்த அவேஷ் கான், ஆட்டத்துக்குப் பிறகு கூறியதாவது:

கடந்த 4 ஆட்டங்களாக அணியில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. இதற்குக் காரணம் பயிற்சியாளர் டிராவிட். அவர் எல்லோருக்கும் வாய்ப்புகளைத் தந்து பல ஆட்டங்களில் ஆடவைக்கிறார். ஓரிரு ஆட்டங்களில் மோசமாக விளையாடினாலும் அவர் எந்த வீரரையும் அணியிலிருந்து நீக்குவதில்லை. ஏனெனில் ஓரிரு ஆட்டங்களைக் கொண்டு ஒரு வீரரின் திறமையை மதிப்பிடக்கூடாது. எல்லோருக்கும் தங்கள் திறமையை நிரூபிப்பதற்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. 

கடந்த மூன்று ஆட்டங்களில் ஒரு விக்கெட்டும் எடுக்காததால் எனக்கு அழுத்தம் இருந்தது. ஆனால் ராகுல் சாரும் அணி நிர்வாகமும் இன்று எனக்கு இன்னொரு வாய்ப்பை வழங்கினார்கள். அதனால் தான் நான் 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளேன். என் தந்தையின் பிறந்த நாள் இன்று. அவருக்கான பரிசு இது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com