டிகே: விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லவேண்டும் என்றால் தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பும் அவசியம்...
டிகே: விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு தினேஷ் கார்த்திக் கட்டாயமாக இடம்பெற வேண்டும் எனப் பலரும் கூறி வருகிறார்கள்.

இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்துள்ளார் தினேஷ் கார்த்திக். நேற்று தனது முதல் டி20 அரை சதத்தை எடுத்த தினேஷ் கார்த்திக், 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். 

2019 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக், இரு இன்னிங்ஸில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். அரையிறுதியில் 25 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தார். அதற்குப் பிறகு இந்தியத் தேர்வுக்குழுவும் விராட் கோலியும் ரவி சாஸ்திரியும் தினேஷ் கார்த்திக்கை ஒரேடியாக மறந்து விட்டார்கள்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசியாக பிப்ரவரி 2019-ல் விளையாடினார். அதன்பிறகு 2019 உலகக் கோப்பையில் மோசமாக விளையாடியதால் டி20 அணியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடும் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் இந்திய அணியில் உள்ளதால் தினேஷ் கார்த்திக்கின் தேவை அவசியமில்லாமல் போய்விட்டது. மேலும் 2020-ல் கரோனா காரணமாக ஆட்டங்களும் குறைந்தன. பிறகு டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக இந்திய அணியைத் தயார் செய்ய வேண்டியிருந்ததால் தினேஷ் கார்த்திக்கின் ஞாபகம் யாருக்கும் வரவில்லை. 

2018-ல் இலங்கையில் நடைபெற்ற நிதாஹஸ் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு மறக்க முடியாத வெற்றியை வழங்கினார் தினேஷ் கார்த்திக். 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். மேலும் அச்சமயங்களில் இந்திய அணி இலக்கை விரட்டியபோது பலமுறை கடைசிவரை துணை நின்றார். இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு தமிழக அணிக்காக வெள்ளைப் பந்துப் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தார். கடந்த டிசம்பரில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை 50 ஓவர் போட்டியின் இறுதிச்சுற்றில் சதம் எடுத்தார். 

ஆனால் 2020, 2021 ஐபிஎல் போட்டிகள் தினேஷ் கார்த்திக்குக்குச் சரியாக அமையவில்லை. கேகேஆர் அணியின் கேப்டன் பதவியை விட்டும் விலக நேர்ந்தது. 2020-ல் 169 ரன்களும் 2021-ல் 223 ரன்களும் எடுத்தார். ஸ்டிரேக் ரேட்டுகள் - 126.11, 131.17. இந்த வருடம் போல முத்திரை இன்னிங்ஸ்கள் பெரிதாக இல்லாததால் தினேஷ் கார்த்திக்கை இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்யவேண்டிய அவசியமும் இல்லாமல் போய்விட்டது. 

என்னால் 5,6,7-ம் நிலைகளில் நன்றாக விளையாட முடியும். இந்திய அணிக்கு நல்ல ஸ்கோரைப் பெற்றுத் தர முடியும் என்று கடந்த வருடம் பேட்டியளித்தார். 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் சரியாக விளையாடாததால் டி20 அணியிலிருந்தும் என்னை நீக்கிவிட்டார்கள் என்று வருத்தம் தெரிவித்தார். இருந்தும் இந்திய அணியில் சேர்ப்பதற்கான சாதகமான சூழல் அமையவில்லை.   

இந்த வருட ஏலத்தில் ஆர்சிபி அணி தினேஷ் கார்த்திக்கை ரூ. 5.50 கோடிக்குத் தேர்வு செய்தது. 5.25 கோடி வரை வந்து பின்வாங்கியது சிஎஸ்கே. 

ஐபிஎல் 2022 போட்டிக்காக தேனியில் நடைபெற்ற டி20 போட்டியில் பயிற்சி எடுத்துக்கொண்டார் தினேஷ் கார்த்திக். இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக 287 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 191.33.  கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடினார். ஸ்டிரைக் ரேட்டில் வேறு எந்த இந்திய பேட்டராலும் கார்த்திக்கை நெருங்க முடியவில்லை. வெளிநாட்டுப் பந்துவீச்சாளர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் அவருடைய ஆட்டத்தைப் புகழ்ந்தார்கள். நான் இன்னும் களத்தில் தான் இருக்கிறேன் என்பதை நன்கு உணர்த்தினார்.

பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட பிறகு இந்த வருடம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்குத் தேர்வானார் தினேஷ் கார்த்திக். இப்படி ஒரு மாற்றம் ஏற்படும் என யார் எதிர்பார்த்திருக்க முடியும்? கட்டாக்கில் 21 பந்துகளில் 30 ரன்களும் ராஜ்கோட்டில் 27 பந்துகளில் 55 ரன்களும் எடுத்து திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். அடுத்ததாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கும் தேர்வாகியுள்ளார்.

இனிமேல் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றுவது அவ்வளவு சுலபமல்ல. டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லவேண்டும் என்றால் தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பும் அவசியம் என்பதைத் தற்போது அனைவரும் உணர்ந்துள்ளார்கள். மனம் தளராமல் போராடி நினைத்ததைச் சாதித்துள்ளார் டிகே. வாய்ப்புகளும் வெற்றிகளும் அதிகமாகட்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com