ஆட்ட நாயகன் விருது: தினேஷ் கார்த்திக் புதிய சாதனை

தற்போதைய அணி நிர்வாகத்தில் பாதுகாப்பாக உணர்வதாக விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
ஆட்ட நாயகன் விருது: தினேஷ் கார்த்திக் புதிய சாதனை

டி20 சர்வதேச ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை வென்ற மூத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தினேஷ் கார்த்திக்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சோ்த்தது. அடுத்து தென்னாப்பிரிக்கா 16.5 ஓவா்களில் 87 ரன்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆட்டமிழந்தது. அணியின் கேப்டன் பவுமா ‘ரிடையா்டு ஹா்ட்’ ஆகியிருந்தாா்.

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் இன்னிங்ஸில் தடுமாற்றத்தில் இருந்தபோது ஹாா்திக் பாண்டியா - தினேஷ் காா்த்திக் கூட்டணி அசத்தலாக விளையாடி ஸ்கோரை உயா்த்தியது. தனது முதல் டி20 அரை சதத்தை எடுத்த தினேஷ் கார்த்திக், 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். பாண்டியா 46 ரன்கள் எடுத்தார். 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் தற்போது 2-2 என சமநிலையில் உள்ளது. கடைசி டி20 ஆட்டம் நாளை பெங்களூரில் நடைபெறவுள்ளது.

இந்திய அணியின் வெற்றி குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

தற்போதைய அணி நிர்வாகத்தில் பாதுகாப்பாக உணர்கிறேன். கடந்த ஆட்டத்தில் என்னால் நினைத்தது போல விளையாட முடியவில்லை. (6 ரன்களில் ஆட்டமிழந்தார்) ஆனால் ஆட்டம் முடிந்த பிறகு ஓய்வறையில் என்னால் செளகரியமாக இருக்க முடிந்தது. தற்போது ஓய்வறை பாதுகாப்பான இடமாக உள்ளது. இதமான உணர்வைத் தருகிறது. வெற்றி பெற்றாலும் தோற்றாலும் மாற்றங்கள் இருப்பதில்லை. ஏதோ ஓர் அமைதி நிலவுகிறது. இந்தத் தொடரை நாம் எப்படி அணுகவேண்டும் என்பதில் டிராவிட் தெளிவாக இருந்தார். நாம் தென்னாப்பிரிக்காவைத் தோற்கடிக்க வேண்டும் என்று அவர் சொன்னதாகத் தெரியவில்லை. பதிலாக, பந்துவீச்சாளர்களிடமும் பேட்டர்களிடமும் என்ன எதிர்பார்க்கிறார் எனக் கூறுகிறார். இந்தத் தெளிவான நிலை மிக முக்கியம் என நினைக்கிறேன் என்றார். 

இந்நிலையில் டி20 சர்வதேச ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை வென்ற மூத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தினேஷ் கார்த்திக். 37 வயதில் ஆட்ட நாயகன் விருதை வென்ற தினேஷ் கார்த்திக், இந்த விருதை வென்ற முதல் 35+ இந்திய வீரர் ஆகிறார். இதற்கு முன்பு 2021-ல் ரோஹித் சர்மா, 34 வருடங்கள், 216 நாள்களில் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அவருடைய சாதனையை தினேஷ் கார்த்திக் முறியடித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com