இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரௌண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் கரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து, இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பு, அஸ்வினுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மும்பை வந்து ஜூன் 16-ம் தேதி இந்திய கிரிக்கெட் அணியுடன் அவர் இணைய வேண்டியிருந்தது. ஆனால், நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்திய அணியுடன் அவர் இங்கிலாந்துக்குப் புறப்படவில்லை.
இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்த அவர் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி இந்திய அணியுடன் இணைந்துவிட்டார். லெய்செஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக இன்று (வியாழக்கிழமை) தொடங்கிய பயிற்சி ஆட்டத்துக்கு முன்பு அவர் இந்திய வீரர்களுடன் இருந்தார். எனினும், இந்தப் பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.
இங்கிலாந்து, இந்தியா இடையே கடந்தாண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆட்டம் வரும் ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.