இரண்டரை மாத ஐபிஎல்: பாகிஸ்தான் எதிர்ப்பு
By DIN | Published On : 25th June 2022 03:33 PM | Last Updated : 25th June 2022 03:33 PM | அ+அ அ- |

ஐபிஎல் போட்டியை 2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டுகளுக்கு தொலைக்காட்சி மற்றும் எண்ம (டிஜிட்டல்) ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ஏலத்தில் விட்டதன் மூலம் மொத்தமாக ரூ.48,390.5 கோடி வருவாய் ஈட்டவுள்ளது பிசிசிஐ. தொலைக்காட்சி ஒளிபரப்பில் டிஸ்னி ஸ்டார் நிறுவனமும் டிஜிடல் ஒளிபரப்பில் வையாகாம் நிறுவனமும் துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளுக்கான உரிமைகளைப் பெற்றுள்ளன. இதனால் ஐபிஎல் போட்டியில் ஆட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது: அடுத்த ஐசிசி எஃப்டிபி அட்டவணையில் (2023 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு), ஐபிஎல் போட்டிக்காக இரண்டரை மாதங்கள் ஒதுக்கப்படும். இதன்மூலம் எல்லா சர்வதேச கிரிக்கெட் வீரர்களாலும் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள முடியும். ஐசிசி மற்றும் இதர கிரிக்கெட் வாரியங்களுடன் இதுபற்றி விவாதித்துள்ளோம் என்றார்.
ஐபிஎல் 2022 போட்டியில் மொத்தமாக 74 ஆட்டங்கள் நடைபெற்றன. ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008-ம் வருடம் 59 ஆட்டங்களே நடைபெற்றன. 2023, 2024 ஆகிய இரு ஆண்டுகளில் தலா 74 ஆட்டங்களை நடத்தவும் 2025, 2026 ஆண்டுகளில் தலா 84 ஆட்டங்களையும் 2027-ல் 94 ஆட்டங்களை நடத்தவும் பிசிசிஐ திட்டுமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இரண்டரை மாத ஐபிஎல் போட்டிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இரண்டை மாத ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களால் கலந்துகொள்ள முடியாத நிலை உள்ளது. முதல் வருடத்துக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் கலந்துகொள்வதில்லை. இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான அரசியல் காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டரை மாத ஐபிஎல் போட்டி நடைபெற்றால் அச்சமயத்தில் பாகிஸ்தான் அணியால் இதர நாடுகளுடன் விளையாட முடியாத சூழலும் ஏற்படும். இதனால் இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா இதுபற்றி கூறியதாவது:
ஐபிஎல் போட்டி இரண்டரை மாதம் நடத்தப்படும் என்பது பற்றி அறிவிப்பு எதுவும் வரவில்லை. இதுபற்றி எனக்கு ஒரு கருத்து உள்ளது. ஜூலையில் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் இதுபற்றி பேசவிருக்கிறோம். ஐபிஎல் போட்டியின் விரிவாக்கம் குறித்து முறைப்படி அறிவிப்பு வந்தால் எங்கள் கருத்துகளைத் தீவிரமாக முன்வைப்போம் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...