‘23 வருடத்திற்கு முன்பு கேப்டனாக இருக்கும்போது தவறவிட்ட ரஞ்சி கோப்பை தற்போது கைவசமானது’- ம.பி. அணியின் பயிற்சியாளர் நெகிழ்ச்சி
By DIN | Published On : 26th June 2022 08:43 PM | Last Updated : 26th June 2022 08:52 PM | அ+அ அ- |

ம.பி. அணியின் கேப்டனும் பயிற்சியாளரும் கோப்பையை முத்தமிடும் காட்சி
23 வருடத்திற்கு முன்பு கேப்டனாக இருக்கும்போது தவறவிட்ட ரஞ்சி கோப்பையை தற்போது பயிற்சியாளராக இருக்கும்போது கிடைத்து விட்டது மகிழ்ச்சியளிப்பதாக ம.பி. அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் கூறியுள்ளார்.
1988-1989 ரஞ்சி கோப்பை போட்டியில் ம.பி. அணி முதல் முறையாக இறுதிப்போட்டியில் விளையாடியது. அப்போட்டியின் கேப்டன் தற்போதைய ம.பி. அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் என்பது சுவாரசியமான தகவல். அப்போது இறுதிப்போட்டியில் ம.பி. அணி கர்நாடக அணியிடம் தோல்வியுற்றது.
இப்போது 2021-2022 ரஞ்சி கோப்பை போட்டியில் ம.பி. அணி கோப்பையை முதன்முறையாக வென்று சரித்திரம் படைத்துள்ளது. இதில் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் என்பதால் சினிமா மாதிரி இருப்பதை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்திலும் இப்படியாகத்தான் தோற்றுப்போன கேப்டன் பயிற்சியாளராக வெல்லுவார் என்பது தமிழ் ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளது.
இந்த வெற்றியைக் குறித்து ம.பி. பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் கூறியதாவது:
எல்லா கோப்பையும் மகிழ்ச்சி தரும் ஆனால் இது சற்று கூடுதலான மகிழ்ச்சி. கேப்டனாக என்னால் முடியவில்லை. ஆனால் தற்போது ஆதித்யாவை (ம.பி. கேப்டன்) நினைத்துப் பெருமையாக உள்ளது. எனக்கு எப்போதுமே ம.பி. அணிக்கு ஏதோ சிறிது திருப்பி செலுத்த வேண்டுமென்று நினைப்பு இருக்கும். அது இப்போது நிறைவடைந்தது. அதனால் இந்த வெற்றி மிகுந்த நெகிழ்ச்சியாக உள்ளது.