அயர்லாந்து ரசிகர்களுக்குப் பிடித்த இரு இந்திய வீரர்கள்: பாண்டியா
By DIN | Published On : 29th June 2022 01:24 PM | Last Updated : 29th June 2022 01:24 PM | அ+அ அ- |

அயர்லாந்து ரசிகர்களுக்குப் பிடித்த இரு இந்திய வீரர்கள் என தினேஷ் கார்த்திக்கையும் சஞ்சு சாம்சனையும் இந்திய டி20 அணி கேப்டன் பாண்டியா குறிப்பிட்டுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தைப் பரபரப்பான முறையில் வென்று தொடரை வென்றுள்ளது இந்திய அணி.
டப்லினில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பெட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. தீபக் ஹூடா 57 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து அசத்தினார். சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகக் களமிறங்கி 77 ரன்கள் எடுத்தார்.
கடினமான இலக்கை அபாரமாக விரட்டிய அயர்லாந்து அணி, போராடித் தோற்றது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. கேப்டன் ஆன்டி பால்பிர்னி 60 ரன்களும் பால் ஸ்டிர்லிங் 40 ரன்களும் டெக்டர் 39 ரன்களும் எடுத்தார்கள். ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தீபக் ஹூடா தேர்வானார்.
இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு கேப்டன் பாண்டியா கூறியதாவது:
கடைசி ஓவரில் அழுத்தத்தை உணரவில்லை. வேகமாகப் பந்துவீசுபவர் என்பதால் உம்ரான் மாலிக் சாதித்து விடுவார் என நினைத்தேன். அந்த வேகத்தில் வரும் பந்துகளை அடிப்பது மிகக்கடினம். தங்களிடம் உள்ள திறமையை அயர்லாந்து அணி வெளிப்படுத்தி விட்டது. அற்புதமான ஷாட்களை விளையாடினார்கள். அயர்லாந்து ரசிகர்கள் அபாரம். அவர்களுக்குப் பிடித்தமானவர்கள் சஞ்சு சாம்சனும் தினேஷ் கார்த்திக்கும். ஆட்டத்தை அவர்கள் மிகவும் ரசித்தார்கள். அயர்லாந்தில் உள்ள கிரிக்கெட் சூழலையும் நாங்கள் அனுபவித்துள்ளோம். இந்திய அணிக்குத் தலைமை தாங்கி தொடரில் வெற்றி பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.