மகளிர் உலகக் கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய மே.இ. தீவுகள் அணி
By DIN | Published On : 04th March 2022 03:40 PM | Last Updated : 04th March 2022 03:40 PM | அ+அ அ- |

தோல்வியடைந்த நியூசிலாந்து அணி (கோப்புப் படம்)
இன்று தொடங்கிய மகளிர் உலகக் கோப்பைப் போட்டியின் முதல் ஆட்டத்தில் பரபரப்பான முறையில் 3 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
நியூசிலாந்தில் இன்று முதல் மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. 31 நாள்களுக்கு ஆறு நகரங்களில் 31 ஆட்டங்கள் நடைபெற்றவுள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் என 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. 8 அணிகளும் இதர அணிகளுடன் ஒரு முறை மோதும் விதத்தில் லீக் ஆட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஏப்ரல் 3 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.
இன்று முதல் தொடங்கியுள்ள மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்தும் மேற்கிந்தியத் தீவுகளும் மோதின. முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மே.இ. தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை ஹேலி மேத்யூஸ் 128 பந்துகளில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் எடுத்து அசத்தினார்.
நியூசிலாந்து அணி இலக்கை விரட்டுவதற்குக் கடும் சவாலாக இருந்தார்கள் மே.இ. தீவுகள் பந்துவீச்சாளர்கள். அமீலியா கெர்ரை 13 ரன்களில் வீழ்த்தியது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கேப்டன் சோபின் டிவைன் சதமடித்து அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். எனினும் 45-வது ஓவரில் 108 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் நியூசிலாந்து வெற்றி பெற 6 ரன்களே தேவைப்பட்டன. கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்தன. 49-வது ஓவரின் கடைசி இரு பந்துகளிலும் பவுண்டரிகள் அடிக்கப்பட்டதால் நியூசிலாந்தின் வெற்றியை அனைவரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் கடைசி ஓவரை அதுவரை பந்துவீசாத டாட்டின் வீச வந்தார். அது அற்புதமான முடிவாக அமைந்தது. டாட்டின் சிறப்பாகப் பந்துவீசி கேட்டி மார்டினை 44 ரன்களிலும் ஜெஸ் கெர்ரை 25 ரன்களிலும் ஆட்டமிழக்கச் செய்தார். இதன்பிறகு கடைசி பேட்டர், அவசரப்பட்டு ஓடி ரன்அவுட் ஆனார். இதனால் கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியால் 2 ரன்களை மட்டும் எடுக்க முடிந்தது. 49.5 ஓவர்களில் 256 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் பரபரப்பான முறையில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மே.இ. தீவுகள் அணி. ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக ஹேலி மேத்யூஸ் தேர்வானார்.