மொஹலி டெஸ்ட்: இலங்கையைத் திணறடிக்கும் இந்தியப் பந்துவீச்சாளர்கள்

இலங்கை அணி, 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்களுடன் தடுமாறி வருகிறது.
மொஹலி டெஸ்ட்: இலங்கையைத் திணறடிக்கும் இந்தியப் பந்துவீச்சாளர்கள்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி, 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்களுடன் தடுமாறி வருகிறது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடரில் 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் மொஹலி மைதானத்தில் மார்ச் 4 அன்று தொடங்கியுள்ளது.

முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் விஹாரி, ஷ்ரேயஸ் ஐயர், ஜெயந்த் யாதவ் போன்றோர் இடம்பிடித்துள்ளார்கள். ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரோஹித் சர்மா, இந்திய கேப்டனாக அறிமுகமாகும் டெஸ்ட் இது. கோலி விளையாடும் 100-வது டெஸ்ட், இலங்கை டெஸ்ட் அணியின் 300-வது டெஸ்ட் என மொஹலி ஆட்டம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. 

முதல் நாள் முடிவில் இந்திய அணி, 85 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. ஜடேஜா 45, அஸ்வின் 10 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்றும் இந்திய பேட்டர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார்கள். கீழ்நடுவரிசை வீரர்களான ஜடேஜாவும் அஸ்வினும் தங்களது பேட்டிங் திறமையை நன்கு வெளிப்படுத்தினார்கள். 87 பந்துகளில் அரை சதமெடுத்த ஜடேஜா தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 97-வது ஓவரின் முடிவில் இந்திய அணி 400 ரன்களை எட்டியது. அழகான 6 பவுண்டரிகள் அடித்த அஸ்வின், 67 பந்துகளில் அரை சதமெடுத்தார். சமீபகாலமாக பேட்டிங்கிலும் அசத்தி வரும் ஜடேஜா, இந்த டெஸ்டில் முதல் பேட்டராகச் சதமடித்தார். 10 பவுண்டரிகளுடன் 160 பந்துகளில் சதமடித்து இந்திய அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார். ஜடேஜா சதமடிக்கும் முன்பு 61 ரன்களில் லக்மல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் அஸ்வின்.

2-வது நாளின் முதல் பகுதியில் இந்திய அணி 111 ரன்கள் எடுத்தது. அந்தளவுக்கு ஆதிக்கம் 2-வது நாளிலும் தொடர்ந்தது. மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 112 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 468 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 102, ஜெயந்த் யாதவ் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் எப்படியும் 500 ரன்களைப் பெற்றுவிடும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஜெயந்த் யாதவ் 2 ரன்களில் ஃபெர்னான்டோ பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 471/8. ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார் ஷமி. இதன்பிறகு தனது அதிரடி ஆட்டத்தை அவ்வப்போது வெளிப்படுத்த ஆரம்பித்தார் ஜடேஜா. ஷமி அவருக்கு நல்ல இணையாக விளங்கினார். ஒரு சிக்ஸர் அடித்து 211 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார் ஜடேஜா. ஜடேஜாவுடன் இணைந்து 50 ரன்கள் கூட்டணி அமைத்தபோதும் ஷமி அதில் ஒரு ரன்னும் எடுக்கவில்லை. அதன்பிறகு ஷமியும் ரன்கள் எடுக்க ஆரம்பித்தார். இந்த இன்னிங்ஸின்போது அதிக ரன்கள் எடுத்த இந்திய நெ.7 பேட்டர் என்கிற சாதனையைப் படைத்தார் ஜடேஜா. (அதற்கு முன்பு கபில் தேவ் 163 ரன்கள் எடுத்திருந்தார்.) இந்திய அணி எப்படியும் 600 ரன்களைக் கடந்துவிடும், ஜடேஜா இரட்டைச் சதம் எடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தபோது முதல் இன்னிங்ஸை அதற்கு முன்பே டிக்ளேர் செய்தார் ரோஹித் சர்மா. 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்தது. ஜடேஜா - ஷமி கூட்டணி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 15.2 ஓவர்களில் 103 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 175, ஷமி 20 ரன்கள் எடுத்தார்கள். ஜடேஜா 228 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள் அடித்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்ததால் தேநீர் இடைவேளை விடப்பட்டது. 

இலங்கை தொடக்க வீரர்கள் ஆரம்பத்தில் நம்பிக்கையுடன் விளையாடினார்கள். எனினும் திரிமன்னே 17 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கேப்டன் கருணாரத்னேவை 28 ரன்களில் வெளியேற்றினார் ஜடேஜா. ஏஞ்சலோ மேத்யூஸ் 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்த நிலையில் 22 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2-ம் நாள் ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் தனஞ்ஜெயா டி சில்வாவை 1 ரன்களில் வெளியேற்றி அசத்தினார் அஸ்வின். இன்று ஆட்டமிழந்த நான்கு இலங்கை பேட்டர்களும் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்கள். நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹேட்லி டெஸ்ட் கிரிக்கெட்டில் 431 விக்கெட்டுகளை எடுத்த சாதனையைத் தாண்டிச் சென்றுள்ளார் அஸ்வின். இதனால் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் வரிசையில் 11-ம் இடத்துக்கு அவர் முன்னேறியுள்ளார். 

இலங்கை அணி 2-ம் நாள் முடிவில் 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் 108 ரன்கள் எடுத்துள்ளது. பதும் நிஸ்ஸாங்கா 26 ரன்களுடனும் அசலங்கா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளார்கள். இலங்கை அணி 4 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 466 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com