அஸ்வின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி: கிரிக்கெட் விதிமுறைகளில் மாற்றம்

தற்போதைய விதிமுறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம், அஸ்வினின் நீண்ட காலப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி...
அஸ்வின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி: கிரிக்கெட் விதிமுறைகளில் மாற்றம்


கிரிக்கெட் விதிமுறைகளில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது எம்.சி.சி. அமைப்பு.

கிரிக்கெட் விளையாட்டில் விதிமுறைகளை உருவாக்கும் அமைப்பாக செயல்படுகிறது எம்.சி.சி. தற்போது கிரிக்கெட்டில் சில மாற்றங்களை எம்.சி.சி. கொண்டு வந்துள்ளது. அதன் விவரங்கள்:

* ஒரு வீரர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கும்போது கேட்ச் பிடிக்கும் முன்பு மறுமுனையில் இருந்த பேட்டர் மறுபக்க கிரிஸூக்குச் சென்றால் அவரால் அடுத்தப் பந்தை எதிர்கொள்ள முடியும். இந்த விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. இப்போது புதிய பேட்டர் தான் அடுத்தப் பந்தை எதிர்கொள்ள வேண்டும். ஒருவேளை ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு பேட்டர் ஆட்டமிழந்தால் மட்டுமே மறுமுனையில் உள்ள பேட்டர், அடுத்த ஓவரின் ஆரம்பத்தில் முதல் பந்தை எதிர்கொள்ளலாம்.

*நடுவர் முனையில் உள்ள பேட்டர் ஒரு பந்துவீச்சாளர் பந்துவீசும் முன்பே, கிரீஸை விட்டு வெளியேறினால் விதிமுறைகளின்படி அவரை ரன் அவுட் செய்ய முடியும். மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்வது என்றும் இதைக் கூறுவார்கள். இதற்கு முன்பு நேர்மறையற்ற ஆட்டம் என்கிற பிரிவில் விதிமுறை 41-ல் இது இடம்பெற்றிருந்தது. இதனால் பந்துவீச்சாளர்கள் அதிக விமர்சனங்களுக்கு ஆளாவதால் விதிமுறை 38 (ரன் அவுட்) என்கிற விதிமுறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

* பந்தில் உமிழ்நீரைத் தடவி பந்தை ஸ்விங் செய்ய பந்துவீச்சாளர்கள் முயல்வார்கள். கரோனா காலத்தில் இது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் உமிழ்நீரைப் பயன்படுத்துவதால் பந்து நன்கு ஸ்விங் ஆகும் என்பது உறுதி செய்யப்படாததால் இனி எப்போதும் உமிழ்நீரை பந்தின் மீது தடவக்கூடாது என்று புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முறைகேடான விஷயங்கள் நடைபெறுவதும் தடுக்கப்படும்.

* ஒரு ஃபீல்டர் தேவையில்லாமல் நகர்ந்தால் அது டெட் பால் என அழைக்கப்படும். இதனால் பேட்டர் அடிக்கும் ரன்கள் வீணாகிவிடுகின்றன. இதைத் தடுக்கும் பொருட்டு, இனிமேல் ஃபீல்டர் தேவையில்லாமல் நகர்ந்தால் 5 ரன்கள் அபராதம் விதிக்கப்பட்டு, அவை பேட்டிங் அணிக்கு வழங்கப்படும். 

இந்த விதிமுறைகள் அக்டோபர் 2022 முதல் அமலுக்கு வரவுள்ளன. 

*

கிரிக்கெட்டில் மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. விதிமுறைகளின்படி அதைச் செய்ய பந்துவீச்சாளருக்கு உரிமை உண்டு என்றாலும் கிரிக்கெட் உலகில் இதற்கான ஆதரவு குறைவாகவே உள்ளது. சர்ச்சையைத் தவிர்ப்பதற்காக மன்கட் முறையில் ரன் அவுட் செய்ய அணிகள் தயங்குவதுண்டு. 2019 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் பேட்ஸ்மேன் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அது மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார் அஸ்வின்.

இந்நிலையில் தற்போதைய விதிமுறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம், அஸ்வினின் நீண்ட காலப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com