மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சியளித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி

முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இங்கிலாந்து, தொடர்ச்சியாக இரு தோல்விகளை எதிர்கொண்டுள்ளது.
மே.இ. தீவுகள் கேப்டன் ஸ்டெஃபான் டெய்லர் (கோப்புப் படம்)
மே.இ. தீவுகள் கேப்டன் ஸ்டெஃபான் டெய்லர் (கோப்புப் படம்)

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

டுனேடினில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் ஷெமைன் கேம்பெல் 66 ரன்கள் எடுத்தார். சேடியன் நேஷன் 49 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்தின் சோபி 10 ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நடுவரிசை பேட்டர்கள் சொதப்பியதால் இலக்கை விரட்டுவதில் இங்கிலாந்து அணி மிகவும் தடுமாறியது. 156 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தபோது கீழ்வரிசை பேட்டர்களான சோபியும் கேட் கிராஸும் 61 ரன்கள் கூட்டணி அமைத்து திருப்புமுனையை உருவாக்கப் பார்த்தார்கள். ஆனால் கேட் கிராஸ் 27 ரன்களில் ரன் அவுட் ஆனதால் முயற்சி வீணானது. கடைசியில் 47.4 ஓவர்களில் 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இங்கிலாந்து அணி. சோபி 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷமிலியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

உலகக் கோப்பைப் போட்டியில் முதல்முதலாக இங்கிலாந்து வீழ்த்தியுள்ளது மே.இ. தீவுகள் அணி. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இங்கிலாந்து, தொடர்ச்சியாக இரு தோல்விகளை எதிர்கொண்டுள்ளது. ஆனால், மே.இ. தீவுகள் அணி தொடர்ச்சியாக இரு வெற்றிகளைப் பெற்றுள்ளது.

கடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக மொத்தமாக விளையாடிய ஆறு ஆட்டங்களிலும் தோற்றது மே.இ. தீவுகள் அணி. ஆனால் இந்த உலகக் கோப்பையில் முதல் இரு ஆட்டங்களிலும் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளைப் பரபரப்பான முறையில் தோற்கடித்து போட்டியை அட்டகாசமாக ஆரம்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com