மே.இ. தீவுகள் டெஸ்ட்: பேர்ஸ்டோவின் சதத்தால் சரிவிலிருந்து மீண்டெழுந்த இங்கிலாந்து (ஹைலைட்ஸ் விடியோ)

190 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 17 பவுண்டரிகள்.
மே.இ. தீவுகள் டெஸ்ட்: பேர்ஸ்டோவின் சதத்தால் சரிவிலிருந்து மீண்டெழுந்த இங்கிலாந்து (ஹைலைட்ஸ் விடியோ)

ஆஷஸ் தொடரில் தோற்றாலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நார்த் சவுண்டில் தொடங்கிய டெஸ்ட் தொடரின் ஆரம்பத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. ஆனால் முதல் 4 விக்கெட்டுகளை 48 ரன்களுக்கு இழந்து தடுமாறியது. பிறகு 36 ரன்களுக்கு பென் ஸ்டோக்ஸும் ஆட்டமிழந்ததால் 115/5 என நிலைமை மேலும் மோசமானது. விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ், பேர்ஸ்டோவுடன் இணைந்தார். இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டெழுந்தது. அணியின் ஸ்கோர் 210 ரன்களைக் கடந்த பிறகு 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் பென் ஃபோக்ஸ். அதன்பிறகு வந்த கிறிஸ் வோக்ஸ், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்தார்.

6-ம் நிலை வீரராகக் களமிறங்கினார் பேர்ஸ்டோ. சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் அதிரடிய வீரராக அறியப்படும் பேர்ஸ்டோ, சூழல் கருதி பொறுப்புடன் விளையாடினார். சிக்ஸர் அடிக்க முயலவேயில்லை. 127 பந்துகளில் அரை சதமெடுத்த பேர்ஸ்டோ, பிறகு ஓரளவு அதிரடியாக விளையாடி 190 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 17 பவுண்டரிகள். 109 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 3 வருடங்களாகச் சதமடிக்காமல் இருந்த பேர்ஸ்டோ, இப்போது தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்து இங்கிலாந்து அணியின் கீழ்நடுவரிசையைப் பலமுள்ளதாக மாற்றியுள்ளார். 

முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 86 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. மே.இ. தீவுகள் அணியில் கெமர் ரோச், சீல்ஸ், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com