வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது: அரையிறுதிக்கான வாய்ப்பை அதிகப்படுத்திய இந்திய மகளிர் அணி

வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது இந்திய அணி.
யாஷ்திகா (கோப்புப் படம்)
யாஷ்திகா (கோப்புப் படம்)

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது இந்திய அணி.

ஹேமில்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளான மந்தனா 30, ஷஃபாலி வர்மா 42 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். 15-வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் எடுத்த இந்தியா திடீரென 5 பந்துகளில் ஒரு ரன்னும் எடுக்காமல் 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அதற்குப் பிறகு நிதானமாக விளையாட வேண்டிய கட்டாயம் இந்திய பேட்டர்களுக்கு ஏற்பட்டது. யாஷ்திகா பாட்டியா 50 ரன்கள் எடுத்தார். இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. கடைசிக்கட்டத்தில் பூஜா 30, ஸ்னேக் ராணா 27 ரன்களை விரைவாக எடுத்து இந்திய அணிக்குக் கெளரவமான ஸ்கோரை அளித்தார்கள். வங்கதேசத்தின் ரிது மோனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

வங்கதேச அணி ஆரம்பம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. ஒருவராலும் 35 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் போனது. சல்மா அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணி, 40.3 ஓவர்களில் 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. ஸ்னேக் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக யாஷ்திகா பாட்டியா தேர்வானார். 

இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றுள்ளது. ஞாயிறன்று கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com