25 வயதில் ஓய்வு: சராசரி வாழ்க்கைக்காக கனவுகளை நிறுத்திய ஆஷ் பார்டி

டென்னிஸ் வாழ்க்கை சாதாரணமாக இருப்பதில்லை. நான் ஒரு சராசரி வாழ்க்கையை வாழ நினைக்கிறேன்.
25 வயதில் ஓய்வு: சராசரி வாழ்க்கைக்காக கனவுகளை நிறுத்திய ஆஷ் பார்டி

எனக்கு 25 வயதுதான் ஆகிறது, டென்னிஸ் டென்னிஸ் என உலகமெங்கும் சுற்ற வேண்டியிருக்கிறது, ஒவ்வொரு போட்டியிலும் எதிராளியிடம் கடுமையாக மோதவேண்டியிருக்கிறது, அழுத்தம்... அழுத்தம்... இதில் கரோனா கட்டுப்பாடுகள் வேறு, எங்கும் வெளியே செல்ல முடியாது. பெரும்பாலும் நாலு சுவற்றுக்குள்ளேயே அடைந்துகொண்டிருக்க வேண்டும், ஜெயித்தால் போதுமா, கோப்பைகளை வென்று குவித்தால் போதுமா, கோடி கோடியாகச் சம்பாதித்தால் போதுமா? நிம்மதி உண்டா, சுதந்திரம் உண்டா, எங்குச் சென்றாலும் ரசிகர்கள் மேலே வந்து விழுகிறார்கள், செல்ஃபி எடுக்கக் குவிகிறார்கள், என்ன செய்தாலும் ஊடகங்களில் செய்தியாகிறது, காதலனுடன் நிம்மதியாகக் கைகோர்த்து வெளியே சுற்ற முடிகிறதா, என் வயதுப் பெண்கள் எல்லாம் எப்படியெல்லாம் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள், இந்த வயதில் அனுபவிக்காமல் மூதாட்டியாகும்போதா காதலனுடன் சேர்ந்து ஊர் சுற்ற முடியும்? எல்லாவற்றுக்கும் காரணம் இந்த டென்னிஸ் தானே, ஒரு போட்டியில் வென்றாலும் தீர்கிறதா ஆசை, அடுத்தப் போட்டி, இன்னும் அடுத்தப் போட்டி என மூச்சு முட்ட ஓடவேண்டியிருக்கிறது, ஒரு கிராண்ட்ஸ்லாம் வென்றால் இன்னொன்றை வெல்லச் சொல்கிறார்கள், மூன்று பட்டங்களை வென்று காண்பித்தாலும் நாலாவது கிராண்ட்ஸ்லாமை வெல்ல முடியவில்லையா எனக் கேட்கிறார்கள், நான்கையும் வென்றாலும் மட்டும் பாராட்டி விடுவார்களா இவர்கள்? ஸ்டெஃபி கிராஃபைப் பார், செரீனாவைப் பார், ஃபெடரரைப் பார், ஜோகோவிச்சைப் பார் என உசுப்பேற்றுவார்கள்!

நான் எப்போதுதான் எனக்கான வாழ்க்கையை வாழ்வது? டென்னிஸையே கட்டி அழுது என் வாழ்க்கையை, இளமையைத் தொலைக்க வேண்டுமா? இதோ கோல்ஃப் விளையாட்டு வீரர் கேரி கிஸ்ஸிகுடன் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, அடுத்தது எப்போது திருமணம் என்று பார்க்கிறவர்கள் எல்லாம் கேட்கும் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வது? எனக்கு ஓய்வு கிடைத்தால் கிஸ்ஸிக் கையில் கிடைப்பதில்லை. இப்படி ஆளுக்கொரு பக்கம் ஓடிக்கொண்டிருந்தால் எப்படித் திருமணம் செய்து, எப்படி குழந்தை குட்டியென்று வாழ்வது? குழந்தை பெற்ற பிறகும் டென்னிஸில் செரீனா வில்லியம்ஸ் படும் பாட்டை நானும் பட வேண்டுமா? நிம்மதியாகக் காதலிக்கவே முடியவில்லை. இதில் எங்குக் குடும்பஸ்திரீயாக வாழ்ந்து விட முடியும்? 

நெ.1 வீராங்கனையாக இருந்து என்ன பயன்,  நினைத்த வாழ்க்கையை வாழ முடியவில்லை. அதுதான் விஷயம். ஒரு சாதனையை நிகழ்த்தினால் அடுத்த சாதனையைத் துரத்தி ஓட வேண்டியிருக்கிறது. ஒரே வீட்டில் இரு விளையாட்டு வீரர்கள் இப்படி மாறி மாறி துரத்திக்கொண்டிருந்தால் எங்களுக்கான வாழ்க்கையை யார் வாழ்வது? உங்களுக்கென்ன நாங்கள் உயிரைக் கொடுத்து விளையாடும்போது ஆஹா... அருமையான பொழுதுபோக்கு என எண்ணி கைத்தட்டி மகிழ்வீர்கள், அதற்காக நாங்கள் ரத்தம் சிந்தி பாடுபட வேண்டுமா, வாழ்க்கையைத் தொலைக்க வேண்டுமா? இது எதையும் செய்யாமல் என் தோழிகள், உறவினர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களே. அவர்களும் தான் சம்பாதிக்கிறார்கள். வீடு, நிலம் வாங்குகிறார்கள். என்ன பேர், புகழ் இல்லை. இருந்துவிட்டுப் போகிறது? அதனால் என்ன பிரயோஜனம்? நாலு விளம்பரம் வரும். கை நிறைய காசு கிடைக்கும். இங்குக் காசுக்கா பஞ்சம்? இதுவரை 23,829,071 அமெரிக்க டாலரைச் சம்பாதித்துள்ளேன். இந்தியர்களுக்குப் புரிய வேண்டுமென்றால் 182 கோடி ரூபாய். இன்னொரு பக்கம் வருங்கால ஆத்துக்காரரும் கை நிறையவே சம்பாதிக்கிறார். இதை வைத்து இன்னும் ஏழேழு தலைமுறைக்குச் சாப்பிடலாம். சந்தோஷமாக வாழலாம். இனியும் எதற்கு ஓடவேண்டும்? எப்படியும் டென்னிஸ் வரலாற்றில் எனக்கொரு இடமுண்டு. நூறு வருடமானாலும் என்னைப் பற்றி பேசுவார்கள். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் என் பெயரும் விக்கிபீடியாவில் உள்ளது. 

ஏற்கெனவே இப்படிச் சொன்னவள் தானே என்னைக் கேட்காதீர்கள். 2011-ல் 15 வயதில் விம்பிள்டன் ஜூனியர் பட்டம் வென்றேன். ஆனால் கடின உழைப்பு, அதிகப் பயணங்களால் நான் சோர்வானதால் 2014-க்குப் பிறகு இரு வருடங்களுக்கு ஓய்வு எடுத்தேன் தான். அப்போதுகூட விளையாட்டை விடவில்லை. எனக்குப் பிடித்த கிரிக்கெட்டில் ஈடுபட்டேன். மகளிர் பிக் பாஷ் லீக்கில் விளையாடினேன். இரு வருடங்கள் கழித்து மீண்டும் டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட்டேன். ஆச்சு, மூன்று கிராண்ட்ஸ்லாம்களை ஜெயிச்சாச்சு. நெ.1 வீராங்கனை என்கிற பேர் வேறு. நடப்பு வீரர்களில் ஃபெடரர், நடால், ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் மற்றும் நான் என இந்த 5 பேர் மட்டுமே மூன்று விதமான ஆடுகளங்களில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளோம். அவர்களுடன் என்னை இணைத்து பேசுவதே ஒரு மாதிரியாக உள்ளது. அவர்கள் எல்லாம் எப்பேர்ப்பட்ட வீரர்கள்! இதற்கு மேலும் என்ன சாதித்துக் கொடி நட்டப் போகிறேன்? 

நான் எல்லோருக்கும் பிடித்தமானவள். சர்ச்சைகள் அற்றவள். நட்புடன் பழகுவேன். ஈகோ சுத்தமாகக் கிடையாது. இதனாலேயே ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சக வீராங்கனைகளுக்கும் என்னைப் பிடிக்கும். ஒரு கச்சிதமான விளையாட்டு வீரராக என்னைக் குறிப்பிடுவார்கள். அத்தனைக்கும் நன்றி. 

கடந்த வருடம் விம்பிள்டன், இந்த வருடம் ஆஸ்திரேலிய ஓபன். சொந்த மண்ணில் ஜெயித்து விட்டேன். 44 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை வென்ற ஆஸ்திரேலியர் என்கிற பெருமை கூடுதலாகக் கிடைத்தது. பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், ஆஸ்திரேலிய ஓபன் என மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வீட்டை அலங்கரிக்கின்றன. போதும் என்கிறது மனம். 

இந்த டென்னிஸ் வாழ்க்கை சாதாரணமாக இருப்பதில்லை. நான் ஒரு சராசரி வாழ்க்கையை வாழ நினைக்கிறேன். அதற்கான ஏக்கம் நிறைய உள்ளது. 25 வயதிலாவது சராசரி வாழ்க்கைக்கு நான் திரும்ப வேண்டும். என்னுடைய இதர கனவுகளைத் துரத்த வேண்டும். நெ.1 வீராங்கனையாக விடைபெறுவது கொடுப்பினை.

ஆமாம். 2008-ல் பெல்ஜிய வீராங்கனை ஜஸ்டின் ஹெனின் நெ.1 வீராங்னையாக இருந்தபோது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். அதற்குப் பிறகு நெ.1 வீராங்கனையாக விடைபெறுவது நான் தான். ஆனால் அந்த பெல்ஜிய வீராங்கனை இரு வருடங்கள் கழித்து மீண்டும் விளையாட வந்தார். என்னை விடவும் இளவயதில், 23 வயதில் இன்னொரு பெல்ஜிய வீராங்கனை கிம் கிலிஜ்ஸ்டர்ஸ் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் நெ.4 வீராங்கனை. அவரும் இரு வருடங்கள் கழித்து மீண்டும் விளையாட வந்து அடுத்தடுத்து இரு யு.எஸ். ஓபன் பட்டங்களை வென்றார். இப்படி வரலாற்றில் பல உதாரணங்களும் உண்டு. ஏன் நானே இரு வருடங்கள் விளையாடாமல் இருந்து பிறகு விளையாட வந்தவள் தானே. இனி அப்படி நடக்காது. முற்றுப்புள்ளி வைச்சாச்சு. 

எனக்குத் தெரியும், என்னுடைய இந்த முடிவை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ள மாட்டார்கள். அது எனக்குப் பிரச்னையில்லை. விமானப் பயணம் எதுவும் இல்லாமல், என் குடும்பத்தை விட்டு, வீட்டை விட்டுப் பிரியாமல் எனக்குப் பிடித்ததைச் செய்யப் போகிறேன். நான் வளர்ந்த என் வீட்டில் இருக்கவே எனக்குப் பிடிக்கிறது. 

ஒரு டென்னிஸ் வீராங்கனையாக இது சரியான முடிவா எனச் சொல்லமுடியாது. ஆனால் ஒரு மனிதனாக என் முடிவு மிகச்சரி. எனக்கு வேறு கனவுகள் உள்ளன. அதைத் துரத்த வேண்டுமென்றாலும் முதலில் டென்னிஸைத் தலைமுழுக வேண்டும். உடல்ரீதியாக என்னிடம் சக்தி இல்லை. இன்னும் நிறைய ஜெயிக்க வேண்டும் என்கிற ஆசையும் இல்லை. என் கதை முடிந்தது. எனக்குப் பிடித்தாற்போல் நான் வாழப் போகிறேன். டாட்டா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com