25 வயதில் ஓய்வு பெறும் நெ.1 டென்னிஸ் வீராங்கனை
By DIN | Published On : 23rd March 2022 08:38 AM | Last Updated : 23rd March 2022 08:47 AM | அ+அ அ- |

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லி பார்டி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
25 வயதே ஆன ஆஷ்லி பார்டி, மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வந்த ஆஷ்லி பார்டி, இதுவரை 15 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார்.
2019ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியிலும், 2021ஆம் ஆண்டு விம்பிள்டன் போட்டியிலும், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலும் பட்டங்களை வென்றுள்ளார்.
25 வயதில் உலகின் முதல் நிலை வீராங்கனையாக இருக்கும் அவர், தற்போது டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக விடியோ வெளியிட்டுள்ள ஆஷ்லி பார்டி, ''டென்னிஸ் விளையாட்டின் மீதான அன்பை எப்போதும் நிறுத்தப்போவதில்லை. எனது வாழ்வின் மிகப்பெரிய அங்கம் டென்னிஸ் விளையாட்டு. ஆனால், எனது வாழ்வின் மற்றொரு பகுதியையும் நான் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைய வேண்டும். இனி ஆஷ்லி பார்டி விளையாட்டு வீராங்கனையாக இருக்கப்போவதில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆஷ்லி பார்டி தொடர்ந்து 121 வாரங்கள் உலகின் முதல் நிலை வீராங்கனையாக நீடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.