சஹாவை மிரட்டிய விவகாரம்: போரியாவுக்கு 2 ஆண்டு தடை விதித்த பிசிசிஐ

சஹாவை போரியா மிரட்டிய விவகாரம் தொடர்பாக விசாரணை செய்தது பிசிசிஐ.
சஹாவை மிரட்டிய விவகாரம்: போரியாவுக்கு 2 ஆண்டு தடை விதித்த பிசிசிஐ

விக்கெட் கீப்பர் சஹாவை மிரட்டிய விவகாரத்தில் பிரபல பத்திரிகையாளர் போரியாவுக்கு 2 ஆண்டு தடை விதித்துள்ளது பிசிசிஐ.

சமீபத்தில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்த இலங்கை கிரிக்கெட் அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியது. விராட் கோலியின் விலகலையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். மேலும் மூத்த வீரர்களான ரஹானேவும் புஜாராவும் அணியிலிருந்து நீக்கப்பட்டார்கள். சஹா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை. 

இந்திய அணியில் தன்னைச் சேர்த்துக்கொள்ளாதது பற்றி அதிருப்தி தெரிவித்த விக்கெட் கீப்பர் சஹா, பிரபல பத்திரிகையாளர் ஒருவருக்குத் தான் பேட்டியளிக்க மறுத்ததால் தன்னை அவர் குறுந்தகவல் வழியாக மிரட்டியதாகவும் பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்தார். அந்தப் பத்திரிகையாளர் அனுப்பிய வாட்சப் தகவலையும் ட்விட்டரில் பகிர்ந்தார். இதையடுத்து அந்தப் பத்திரிகையாளரின் பெயரை சஹா வெளியிடவேண்டும் என்று பல கிரிக்கெட் வீரர்களும் சஹாவிடம் கோரிக்கை விடுத்தார்கள். 

இதன்பிறகு சஹாவை மிரட்டியது பிரபல பத்திரிகையாளர் போரியா மஜும்தார் என்பது தெரியவந்தது. சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதைக்கு எழுத்து வடிவம் அளித்தவர், போரியா. 

சஹாவை போரியா மிரட்டிய விவகாரம் தொடர்பாக விசாரணை செய்தது பிசிசிஐ. தான் அனுப்பிய வாட்சப் தகவல்களை இடம்மாற்றி வெளியிட்டதாக சஹா மீது குற்றம் சாட்டினார் போரியா. 

இந்நிலையில் சஹாவை மிரட்டிய காரணத்துக்காகப் பத்திரிகையாளர் போரியாவுக்கு 2 ஆண்டு தடை விதித்துள்ளது பிசிசிஐ.

இந்த 2 ஆண்டுத் தடையினால்.. 

* இந்தியாவில் நடைபெறும் எந்தவொரு சர்வதேச, உள்ளூர் ஆட்டங்களுக்கும் ஊடகராகச் செல்ல போரியாவுக்கு அனுமதி மறுக்கப்படும். 

* இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்களிடம் அவரால் பேட்டி எடுக்க முடியாது. 

* பிசிசிஐயுடன் இணைந்துள்ள கிரிக்கெட் சங்கங்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிக்கெட் பகுதிகளில் போரியாவுக்கு அனுமதி மறுக்கப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com