
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது இலங்கை அணி.
பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் மூன்று பேட்டர்கள் குறைந்தது 20 ரன்கள் எடுத்தார்கள். எனினும் எந்த பேட்டராலும் 30 ரன்களைத் தொட முடியாமல் ஆட்டமிழந்தார்கள். தொடக்க வீரர் குர்பாஸ் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. ஹசரங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் தோற்கும் அணியால் அரையிறுதிக்கு நுழைய முடியாது என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்பட்டது. இது முக்கியமான ஆட்டம் என்பதால் பொறுப்புடன் விளையாடினார்கள் இலங்கை பேட்டர்கள். பதும் நிசங்கா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். 6 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்தது இலங்கை. 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் என நிதானமாகவே ஆரம்பத்தில் விளையாடினார்கள். இதன்பிறகு வேகத்தைக் கூட்டினார்கள். 11-வது ஓவர் முதல் அடுத்த 3 ஓவர்களில் 36 ரன்கள் கிடைத்தன. இறுதியில் 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இலங்கை அணி. தனஞ்ஜெயா டி சில்வா 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹசரங்காவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.
இந்தத் தோல்வியினால் அரையிறுதிக்கான போட்டியிலிருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான். இலங்கை அணி 4 ஆட்டங்களில் 4 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.