ஃபேக் த்ரோ: விராட் கோலி மீது குற்றம் சாட்டும் வங்கதேச வீரர்!

அதற்கு 5 ரன்கள் அபராதம் விதித்திருக்கலாம். அதுவும் எங்களுக்குச் சாதகமாக ஆகியிருக்கும்.
ஃபேக் த்ரோ: விராட் கோலி மீது குற்றம் சாட்டும் வங்கதேச வீரர்!

ஃபீல்டிங்கில் ஏமாற்றிய விராட் கோலி மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் வங்கதேச அணி வெற்றியடைந்திருக்க வாய்ப்புண்டு என அந்த அணியைச் சேர்ந்த வீரர் நுருல் ஹாசன் பேசியுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை டி/எல் முறையில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அடிலெய்டில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி  20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 64, ராகுல் 50 ரன்கள் எடுத்தார்கள். மழை காரணமாக வங்கதேச அணி இன்னிங்ஸில் 7-வது ஓவரின் முடிவில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது வங்கதேச அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்திருந்தது. மழை நின்றபிறகு வங்கதேச அணிக்குப் புதிய இலக்கு அளிக்கப்பட்டது. 16 ஓவர்களில் 151 ரன்கள். அதாவது மீதமுள்ள 9 ஓவர்களில் 85 ரன்கள் எடுக்க வேண்டும். வங்கதேச அணி 16 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. நுருல் 25 ரன்களும் டஸ்கின் அஹமது 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். டி/எல் முறையில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த இந்திய அணிக்கு அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

இந்நிலையில் வங்கதேச இன்னிங்ஸின்போது த்ரோ வீசுவது போல ஃபேக் ஃபீல்டிங் செய்த கோலி மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கவில்லை என வங்கதேச வீரர் நுருல் ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். 7-வது ஓவரின்போது இச்சம்பவம் நடைபெற்றது. லிடன் தாஸ் அடித்த ஷாட்டை ஃபீல்டிங் செய்த அர்ஷ்தீப் சிங், பந்துவீச்சாளர் பக்கம் பந்தை வீசினார். அப்போது பந்து விராட் கோலியின் அருகே சென்றது. அந்தப் பந்தைப் பிடித்து வேகமாக ஸ்டம்ப் பக்கம் வீசுவது போல சைகை காண்பித்தார் கோலி. கிரிக்கெட் விதிமுறைகளின்படி ஃபேக் ஃபீல்டிங்கினால் பேட்டர்களின் கவனம் சிதறினால் அதற்கு 5 ரன்கள் அபராதம் விதிக்க வேண்டும். ஆனால் இந்தச் சம்பவத்தில் கோலியின் செயலை பேட்டர்கள் கவனித்தது போலத் தெரியவில்லை. மேலும் கோலியின் செயலால் பேட்டர்கள் ஏமாற்றப்படவுமில்லை. எனினும் ஃபேக் ஃபீல்டிங்கினால் கோலி மீது நடவடிக்கை எடுத்து 5 ரன்கள் அபராதம் விதித்திருந்தால் நாங்கள் ஜெயித்திருப்போம் என நுருல் ஹாசன் கூறியுள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:

மைதானம் எந்தளவுக்கு ஈரமாக இருந்தது எனத் தெரியும். இதைப் பற்றியெல்லாம் பேசும்போது ஃபேக் த்ரோவும் இருந்தது. அதற்கு 5 ரன்கள் அபராதம் விதித்திருக்கலாம். அதுவும் எங்களுக்குச் சாதகமாக ஆகியிருக்கும். ஆனால் அதுவும் நடக்கவில்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com