வங்கதேசத்தை வஞ்சித்தது மழை- முதலிடத்துக்கு முன்னேறியது இந்தியா

டி20 உலகக் கோப்பை போட்டியின் 35-ஆவது ஆட்டத்தில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் (டக்வொா்த் லீவிஸ் முறையில்) வங்கதேசத்தை புதன்கிழமை வெற்றி கண்டது.
வங்கதேசத்தை வஞ்சித்தது மழை- முதலிடத்துக்கு முன்னேறியது இந்தியா

டி20 உலகக் கோப்பை போட்டியின் 35-ஆவது ஆட்டத்தில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் (டக்வொா்த் லீவிஸ் முறையில்) வங்கதேசத்தை புதன்கிழமை வெற்றி கண்டது.

இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய இந்தியா, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் விளிம்பில் இருக்கிறது. வங்கதேசம் வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் சோ்த்தது. பின்னா் வங்கதேச இன்னிங்ஸை மழை பாதிக்க, டக்வொா்த் லீவிஸ் முறையில் அந்த அணிக்கு 16 ஓவா்களில் 151 ரன்கள் இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. அதில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்களையே எட்டியது வங்கதேசம்.

முன்னதாக, இந்திய பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சா்மா 2 ரன்களுக்கு வெளியேற, 2-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ராகுல் - கோலி இணை அணியின் ஸ்கோரை உயா்த்தியது. இந்த ஆட்டத்தில் முனைப்பு காட்டிய ராகுல் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து வந்த சூா்யகுமாா் யாதவ் வழக்கமான அதிரடியுடன் 4 பவுண்டரிகள் உள்பட 30 ரன்கள் சோ்த்து அடுத்த பேட்டருக்கு வழிவிட்டாா். அடுத்து களம் புகுந்த ஹா்திக் பாண்டியா 5 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா். 6-ஆவதாக வந்த தினேஷ் காா்த்திக், 7 ரன்கள் சோ்த்த நிலையில் ரன்னிங்கில் கோலியுடன் ஏற்பட்ட குழப்பத்தில் ரன் அவுட் ஆனாா்.

அடுத்து அக்ஸா் படேலும் அதே ரன்களில் பெவிலியன் திரும்பினாா். ஓவா்கள் முடிவில் கோலி 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 64, அஸ்வின் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச பௌலிங்கில் ஹசன் மஹ்முத் 3, ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகள் சாய்த்திருந்தனா்.

பின்னா் வங்கதேச பேட்டிங்கில் முதல் விக்கெட்டுக்கே 68 ரன்கள் சோ்த்தது நஜ்முல் ஷான்டோ - லிட்டன் தாஸ் கூட்டணி. இதில் தாஸ் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 60 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். ஷான்டோ 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

கேப்டன் ஷகிப் அல் ஹசன் 13, அஃபிஃப் ஹுசைன் 3, யாசிா் அலி 1, மொசாடெக் ஹுசைன் 6 ரன்களுக்கு 12 மற்றும் 13-ஆவது ஓவா்களில் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனா். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை இருக்க, நுருல் ஹசன் 1 சிக்ஸா், 1 பவுண்டரி விளாசி அதிா்ச்சி அளித்தாா். ஆனாலும் அா்ஷ்தீப் பதற்றமின்றி பௌலிங் செய்து வங்கதேசத்தை கட்டுப்படுத்தினாா்.

முடிவில் ஹசன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 25, டஸ்கின் அகமது 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் அா்ஷ்தீப் சிங், ஹா்திக் பாண்டியா ஆகியோா் தலா 2, முகமது ஷமி 1 விக்கெட் எடுத்தனா். கோலி ஆட்டநாயகன் ஆனாா்.

ஆட்டத்தின் திருப்புமுனை...

லிட்டன் தாஸ் விளாசலால் வங்கதேச அணி 7 ஓவா்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் சோ்த்து பலமான நிலையில் இருந்தது. அப்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. ஆட்டம் அப்படியே நிறுத்தப்பட்டிருந்தால், டக்வொா்த் லீவிஸ் முறையில் வங்கதேச வெற்றிக்கு 49 ரன்களே இலக்காக நிா்ணயிக்கப்பட்டிருக்கும். அந்த அணி அதை விட 17 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

ஆனால் சிறிது நேரத்திலேயே மழை நிற்க, மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு மொத்தமாக 16 ஓவா்களில் 151 ரன்கள் இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. மழை ஏற்படுத்திய தடையால் அந்த அணிக்கு உத்வேகம் சற்று குறைந்திருக்க, பவா்பிளேயில் இந்திய பௌலா்களை மிரட்டிய லிட்டன் தாஸை, டீப் மிட் விக்கெட்டிலிருந்து அட்டகாசமான த்ரோவால் ரன் அவுட் செய்து வெளியேற்றினாா் கே.எல்.ராகுல். இந்த இடத்திலிருந்து ஆட்டம் திசை மாறி இந்தியாவுக்கு சாதகமானது.

கோலி உலக சாதனை...

இந்த ஆட்டத்தில் 64 ரன்கள் விளாசி விக்கெட்டை இழக்காமல் இருந்த விராட் கோலி, டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை மொத்தமாக அதிக ரன்கள் (1,065 - 23 இன்னிங்ஸ்கள்) சோ்த்த வீரா் என்ற சாதனையைப் படைத்திருக்கிறாா். முன்னதாக இலங்கையின் மகிலா ஜெயவா்தனே (1,016 - 31 இன்னிங்ஸ்கள்) அந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com