ஹாட்ரிக் எடுத்த அயர்லாந்து வீரர்: வில்லியம்சன் அதிரடியால் 185 ரன்கள் குவித்த நியூசிலாந்து
By DIN | Published On : 04th November 2022 11:28 AM | Last Updated : 04th November 2022 11:28 AM | அ+அ அ- |

கேன் வில்லியம்சன் (கோப்புப் படம்)
அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் கேப்டன் வில்லியம்சனின் அதிரடியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்துள்ளது நியூசிலாந்து அணி. அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
அடிலெய்டில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் வேகமாக ரன்கள் குவித்தார்கள் நியூசி. பேட்டர்கள். 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்களும் 10 ஓவர்களின் முடிவில் 75/1 ரன்களும் கிடைத்தன. இதற்குப் பிறகு இன்னும் வேகமாக ரன்கள் எடுக்க ஆரம்பித்தார்கள். கடந்த ஆட்டத்தில் நிதானமாக விளையாடியதால் விமர்சனத்துக்கு ஆளான நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தமுறை அதிரடியாக விளையாடினார். 32பந்துகளில் அரை சதமெடுத்தார். 19-வது ஓவரில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். முதலில் வில்லியம்சனை 61 ரன்களில் வீழ்த்திய லிட்டில் அடுத்த இரு பந்துகளில் புதிய பேட்டர்களான நீஷம், சான்ட்னர் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து சாதனை படைத்தார். டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த 2-வது அயர்லாந்து வீரர் என்கிற பெருமையை அடைந்தார்.
நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்துள்ளது. அதிக ரன்ரேட்டைக் கொண்டிருக்கும் நியூசி. அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.