தகர்ந்த கனவு: இந்தியாவை எளிதாக வீழ்த்திய இங்கிலாந்து!

டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
பட்லர்
பட்லர்

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை அரையிறுதிச்சுற்றை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து அணி. 

அடிலெய்டில் நடைபெற்ற 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. இதனால் தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக ரிஷப் பந்த் இந்திய அணியில் விளையாடினார். இங்கிலாந்து அணியில் மலான், மார்க் வுட் காயம் காரணமாக விளையாடவில்லை. பில் சால்ட், ஜோர்டன் ஆகியோர் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தார்கள். இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் ரோஹித் சர்மாவும் கோலியும் சற்று நிதானமாக விளையாடினார்கள். கோலி ஒரு சிக்ஸர் அடித்தார். முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் தான் கிடைத்தது. பவர்பிளே ஓவர்களுக்குப் பிறகு வேகமாக ரன்கள் எடுக்க நினைத்தார்கள். பவுண்டரிகள் அடித்தாலும் 15, 20 ரன்கள் அடிக்குமளவுக்கு ஒரு பெரிய ஓவர் கிடைக்கவில்லை. 28 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களை எடுத்த ரோஹித் சர்மா, ஜோர்டன் பந்தில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்தது.

சூர்யகுமார் வழக்கம்போல வந்தவுடன் சுறுசுறுப்பாக ரன்கள் எடுக்க ஆரம்பித்தார். ஆனால் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 14 ரன்களில் அடில் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார். இன்று அடில் ரஷித் அற்புதமாகப் பந்துவீசி இந்திய அணியைக் கட்டுப்படுத்தினார். 4 ஓவர்களை வீசி 20 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். பாண்டியா கோலிக்கு நல்ல இணையாக விளங்கினார். மேலும் விக்கெட் விழக்கூடாது என்பதால் இருவரும் கவனமாக விளையாடினார்கள். 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த கோலி, ஜோர்டன் பந்தில் ஆட்டமிழந்தார். கோலி - பாண்டியா கூட்டணி 40 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தது. 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து நிதானமாக விளையாடி வந்த பாண்டியா, 18-வது ஓவர் முதல் அதிரடியாக விளையாடினார். 18-வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் அடித்தார் பாண்டியா. சாம் கரண் வீசிய 19-வது ஓவரில் இந்திய அணிக்கு ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் கிடைத்தன. 29 பந்துகளில் அரை சதமெடுத்தார் பாண்டியா. ரிஷப் பந்த் கடைசி ஓவரில் அணிக்காகத் தனது விக்கெட்டைத் தியாகம் செய்தார். 6 ரன்களில் ரன் அவுட் ஆனார். 33 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்த பாண்டியா கடைசிப் பந்தில் ஹிட் விக்கெட்டில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. பாண்டியாவின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்தது. ஜோர்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரு அணிகளுக்குமான வித்தியாசத்தை இங்கிலாந்து இன்னிங்ஸின் பவர்பிளே ஓவர்களில் உணர முடிந்தது. இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டையும் இழக்காமல் முதல் 6 ஓவர்களில் 63 ரன்கள் குவித்தது. இந்தியா பவர்பிளேயில் எடுத்த ரன்களை 3.2 ஓவர்களில் அடைந்தது இங்கிலாந்து. பாண்டியா வீசிய 9-வது ஓவரைத் தவிர முதல் 10 ஓவர்களில் எல்லா ஓவர்களிலும் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் பவுண்டரிகள் அடித்தார்கள். முதல் 10 ஓவர்களில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் எடுத்தது.

இறுதியில் 16 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. அலெக்ஸ் ஹேல்ஸ் 86, பட்லர் 80 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

ஞாயிறன்று நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com