அயர்லாந்திடம் தோல்விக்குப் பிறகு சாம்பியனான இங்கிலாந்து: மனம் திறக்கும் பென் ஸ்டோக்ஸ்
By DIN | Published On : 13th November 2022 07:57 PM | Last Updated : 13th November 2022 07:57 PM | அ+அ அ- |

அயர்லாந்திடம் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது பென் ஸ்டோக்ஸ் நிதானமாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். சிறப்பாக விளையாடிய அவர் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார்.
இதையும் படிக்க: ஆட்டநாயகனும் நானே, தொடர்நாயகனும் நானே: கலக்கும் சுட்டிக் குழந்தை
இந்த நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு பென் ஸ்டோக்ஸ் உலகக் கோப்பை வெற்றி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: இது போன்ற தொடர்களில் உங்களால் சுமைகளைத் தூக்கிக் கொண்டு செல்ல முடியாது. போட்டியில் ஏற்படும் சில தோல்விகளைக் கடந்துதான் போக வேண்டும்.அயர்லாந்து அணி சிறப்பாக செயல்பட்டு எங்களை தோற்கடித்தது. ஆனால், சிறந்த அணிகள் தங்களது தோல்வியில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அந்தப் பாடம் அவர்களுக்கு தோல்வியில் இருந்து மீள உதவியாக இருக்கும். இந்த உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது நீண்ட ஆண்டுகள் தொடரும் பயணம். அந்தப் பயணத்திற்கான பலன் இன்று (நவம்பர் 13) கிடைத்துள்ளது. இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் அருமையாக அமைந்தது. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் சென்று விளையாடியது இன்றையப் போட்டியில் உதவியாக இருந்தது என்றார்.