மும்பையை விட்டுப் பிரிந்த பொலார்ட்: சாதனைகளும் முக்கிய அம்சங்களும்!

ஐபிஎல் போட்டியில் மும்பையுடன் இணைந்து பொலார்ட் நிகழ்த்திய சாதனைகளும் முக்கிய அம்சங்களும்
மும்பையை விட்டுப் பிரிந்த பொலார்ட்: சாதனைகளும் முக்கிய அம்சங்களும்!

ஒரு வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியில் பொலார்ட் இடம்பெறாவிட்டாலும் 2023 ஐபிஎல் போட்டிக்கான மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொலார்டையும் மும்பை இந்தியன்ஸையும் பிரிக்க முடியாது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். 

ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரபல வீரர் கிரோன் பொலார்ட் இன்று அறிவித்துள்ளார். 2010 முதல் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் பொலார்ட். 13 வருடங்களாக மும்பை அணிக்கு விளையாடிய பொலார்ட், 5 முறை ஐபிஎல் கோப்பையை மும்பை வெல்ல உதவியாக இருந்துள்ளார். 

ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக 189 ஆட்டங்களில் பொலார்ட் விளையாடியுள்ளார். 16 அரை சதங்களுடன் 3412 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 147.32. 223 சிக்ஸர்கள். பந்துவீச்சில் 69 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 8.79. 

ஐபிஎல் போட்டியில் மும்பையுடன் இணைந்து பொலார்ட் நிகழ்த்திய சாதனைகளும் முக்கிய அம்சங்களும்: 

* 2010 ஐபிஎல் ஏலத்தில் பொலார்டுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, கேகேஆர் ஆகிய நான்கு அணிகளும் 750,000 அமெரிக்க டாலர் வழங்குவதற்குத் தயாராக இருந்தன. இதன்பிறகு நடைபெற்ற டை பிரேக்கரில் மும்பை அணியின் வசம் சென்றார் பொலார்ட். ஆனால் அதற்கு 2009 ஐபிஎல் ஏலத்தில் 60,000 அமெரிக்க டாலர் அடிப்படை விலையாக வைத்தும் எந்தவொரு அணியும் பொலார்டைத் தேர்வு செய்யவில்லை. பிறகு எப்படி இத்தனை போட்டி?

2009, அக்டோபர் 16 அன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் ஆட்டம் பொலார்டின் தலையெழுத்தை மாற்றியது. அந்த ஆட்டத்தில் 7-வது வீரராகக் களமிறங்கி 18 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்து 171 ரன்கள் என்கிற பெரிய இலக்கை டிரினிடாட் & டொபேக்கோ அணி அடைய உதவினார் பொலார்ட். இந்த ஆட்டம் தான் பொலார்டின் அடையாளமாக மாறிப் போனது. இதனால் தான் பொலார்டைத் தேர்வு செய்ய மும்பை, சிஎஸ்கே உள்ளிட்ட அணிகள் கடுமையாகப் போட்டியிட்டன. இறுதியில் பொலார்டைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டது மும்பை அணி. 

* மும்பை அணி 2013-ல் முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. முக்கியக் காரணம், பொலார்ட் தான். இறுதிச்சுற்றில் 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து மும்பைக்கு வெற்றியை அளித்து, ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். ஐபிஎல் போட்டியில் 14 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். 

* மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சாம்பியன்ஸ் லீக், ஐபிஎல் போட்டிகளில் 13 வருடங்களாக விளையாடியுள்ளார் பொலார்ட். 

* மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வென்றபோது பொலார்ட் எடுத்த ரன்கள்

ஐபிஎல் 2010 இறுதிச்சுற்று 27(10) 
ஐபிஎல் 2013 இறுதிச்சுற்று 60*(32) 
ஐபிஎல் 2015 இறுதிச்சுற்று 36(18) 
ஐபிஎல் 2019 இறுதிச்சுற்று 41*(25) 

* ஓர் டி20 அணிக்காக அதிக ஆட்டங்களில் விளையாடிய வெளிநாட்டு வீரர்கள்

211 - மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பொலார்ட்
157 - ஆர்சிபி அணிக்காக டி வில்லியர்ஸ்
157 - கேகேஆர் அணிக்காக சுநீல் நரைன்
139 - மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மலிங்கா

* ஐபிஎல் போட்டியில் ஒரே அணிக்காக விளையாடிய வீரர்கள் (குறைந்தது 100 ஆட்டங்கள்)

பொலார்ட் - மும்பை இந்தியன்ஸ் (2010 முதல்)
கோலி - ஆர்சிபி (2008 முதல்)
நரைன் - கேகேஆர் (2011 முதல்)
பும்ரா - மும்பை இந்தியன்ஸ் (2013 முதல்)
மலிங்கா - மும்பை இந்தியன்ஸ் (இருமுறை)

* ஐபிஎல் போட்டியில் 3,000 ரன்களும் 50 விக்கெட்டுகளும் எடுத்த வீரர்கள் - பொலார்ட், ஷேன் வாட்சன்.

* ஐபிஎல் போட்டியில் 223 சிக்ஸர்கள் அடித்துள்ளார் பொலார்ட். 5-வது இடம்.

* 2022-ல் பொலார்டை ரூ. 6 கோடிக்குத் தக்கவைத்தது மும்பை அணி. 11 ஆட்டங்களில் 144 ரன்கள் மட்டுமே எடுத்தார்.  ஸ்டிரைக் ரேட் - 107.46 தான். எந்த ஐபிஎல் போட்டியிலும் இவ்வளவு குறைவாக அவருடைய ஸ்டிரைக் ரேட் இருந்தது கிடையாது. 

* 2009-க்குப் பிறகு முதல்முறையாக மலிங்கா, பொலார்ட் இன்றி ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com