உலகக் கோப்பை புள்ளிவிவரங்கள்: ஜெர்மனியின் மறக்க முடியாத தோல்வியும் ஸ்பெயினின் கோல் மழையும்!

உலகக் கோப்பையில் விளையாடிய 4 ஆட்டங்களிலும் கனடா அணி ஒரு கோலும் அடித்ததில்லை.
உலகக் கோப்பை புள்ளிவிவரங்கள்: ஜெர்மனியின் மறக்க முடியாத தோல்வியும் ஸ்பெயினின் கோல் மழையும்!

கத்தாரில் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இந்த 4 நாள்களில் இரு முன்னாள் சாம்பியன்கள் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளன. மெஸ்ஸி தலைமையிலான ஆா்ஜென்டீனா 1-2 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டது. அதேபோல நேற்றைய ஆட்டத்தில் ஜெர்மனியை ஜப்பான் வீழ்த்தியுள்ளது. தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள ஜெர்மனியை 24-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீழ்த்தியிருப்பது உலகக் கோப்பைப் போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 4 நான்கு நாள்களில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணிகள்: ஈகுவடார், இங்கிலாந்து, நெதர்லாந்து, சவூதி அரேபியா, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின், பெல்ஜியம்

தோல்வியடைந்த அணிகள்: கத்தார், ஈரான், செனகல், ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கோஸ்டா ரிக்கா, கனடா

டிரா செய்த அணிகள்: அமெரிக்கா, வேல்ஸ், டென்மார்க், துனிசியா, மெக்சிகோ, போலந்து, மொனாக்கோ, குரோசியா, 

4 நாள்களாக இதுவரையில் நடைபெற்ற ஆட்டங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்:

* குரோசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் எதுவும் அடிக்காமல் ஆட்டத்தை டிரா செய்தது மொராக்கோ. அந்த அணி, உலகக் கோப்பையில் கோல் அடிக்காமல் டிரா செய்யும் 3-வது ஆட்டம் இது. உலகக் கோப்பை வரலாற்றில் வேறு எந்த ஆப்பிரிக்க அணியும் இதுபோல மூன்று ஆட்டங்களில் கோலடிக்காமல் டிரா செய்ததில்லை. 

* 2028 உலக் கோப்பைப் போட்டியில் 2-ம் இடம் பிடித்த அணி குரோசியா. கடந்த 11 உலகக் கோப்பை ஆட்டங்களில் குறைந்தது ஒரு கோலாவது அடித்த அணியாக இருந்தது. இப்போது அந்தச் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. போர்ச்சுகல் கடைசி 6 உலகக் கோப்பை ஆட்டங்களில் குறைந்தது ஒரு கோலாவது அடித்துள்ளது. 

* உலகக் கோப்பையில் 10-க்கும் அதிகமான ஆட்டங்களில் விளையாடிய அணிகளில் முதல் பாதியில் சமனில் இருந்த அணிகளில் முதலிடம் ஜப்பானுக்கு. 71%. குரோசியா விளையாடிய ஆட்டங்களில் 63% ஆட்டங்களில் முதல் பாதியில் சமனில் இருந்துள்ளது. நேற்றைய ஆட்டம் 15-வது. 

* கனடாவைச் சேர்ந்த 39 வயது அடிபா ஹட்சின்சன் தான் இந்தப் போட்டியின் அதிக வயதான வீரர்.

* 1978-க்குப் பிறகு கோல் நோக்கி 20-க்கும் அதிகமான ஷாட்கள் அடித்தும் ஒரு பெனால்டி கிக் கிடைத்தும் கோலடிக்காத முதல் அணி - கனடா. 

* உலகக் கோப்பையில் விளையாடிய 4 ஆட்டங்களிலும் கனடா அணி ஒரு கோலும் அடித்ததில்லை. உலகக் கோப்பையில் வேறு எந்த அணியும் 4 ஆட்டங்கள் விளையாடியும் கோல் அடிக்காமல் இருந்ததில்லை. சீனா, காங்கோ டிஆர், டினிடாட் & டொபாகோ ஆகிய அணிகள் 3 ஆட்டங்களுடன் 2-ம் இடத்தில் உள்ளன. 

* 18 வயது ஸ்பெயின் மிட்ஃபீல்டர் கவி, உலகக் கோப்பையில் கோலடித்த 3-வது இளம் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1958-ல் ஸ்வீடனுக்கு எதிராக பிரேசிலின் 17 வயது பீலே கோலடித்தார். ஸ்பெயினுக்காகப் பெரிய போட்டிகளில் விளையாடிய இளம் வீரர் என்கிற பெருமையையும் கவி பெற்றுள்ளார். 

* 2010-ல் போர்ச்சுகல், வட கொரியாவை 7-0 என வென்றது. அதற்குப் பிறகு இப்போதுதான் இவ்வளவு ஆதிக்கத்துடன் 7-0 என்கிற வித்தியாசத்தில் ஸ்பெயின், கோஸ்டா ரிக்காவை வீழ்த்தியுள்ளது. ஸ்பெயின் அணி 81.3% பந்தைத் தன் வசம் வைத்திருந்தது. 1966-க்குப் பிறகு வேறு எந்த அணியின் இந்தளவுக்குப் பந்தைத் தன் வசம் வைத்துக்கொண்டதில்லை.  

* உலகக் கோப்பையில் முதல்முறையாக ஒரே ஆட்டத்தில் 7 கோல்களை அடித்துள்ளது ஸ்பெயின். 2010-ல் உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி மொத்தப் போட்டியிலும் 8 கோல்களை மட்டுமே அடித்தது. 

* உலகக் கோப்பையில் தனது 100-வது கோலை அடித்துள்ளது ஸ்பெயின். இந்த இலக்கை அடையும் 6-வது அணி. 229 கோல்களுடன் பிரேசில் முதல் இடத்தில் உள்ளது. 

* பந்தை அழகாக பாஸ் செய்து கோலடிக்கும் பாணியில் ஸ்பெயினை அடித்துக்கொள்ள முடியாது. நேற்றைய ஆட்டத்தில் 976 முறை பந்தை பாஸ் செய்தது அதிகமுறை பந்தை பாஸ் செய்ததில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. 1966 முதல் கிடைத்த புள்ளிவிவரங்களின்படி 2018-ல் ரஷியாவுக்கு எதிராக 1008 முறை பாஸ் செய்து முதலிடம் பிடித்தது ஸ்பெயின். 

* ஸ்பெயினுக்கு எதிராக கோஸ்டா ரிக்கா அணி ஒருமுறை கூட கோல் போஸ்டை நோக்கி பந்தை அடிக்கவில்லை. 1966-க்குப் பிறகு இதுபோல நடைபெறுவது 2-வது முறை. 1990-ல் பிரேசிலுக்கு எதிராக கோஸ்டா ரிக்கா இதேபோல மோசமாக விளையாடி ஒருமுறை கூட கோல் அடிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாமல் இருந்தது. 

* ஜப்பானுக்கு எதிராக முதல் கோலை அடித்தது ஜெர்மனிதான். இதுபோல 68-வது முறையாகத் தொடக்க கோலை அடித்து முதலிடத்தில் உள்ளது ஜெர்மனி. 67 கோல்களுடன் பிரேசில் 2-ம் இடத்தில் உள்ளது.

* உலகக் கோப்பையில் இதற்கு முன்னால் முதல் கோலை அடிக்கவிட்டு  ஒருமுறை கூட ஜப்பான் வென்றதே இல்லை. 

* உலகக் கோப்பையில் 1974-க்குப் பிறகு முதல் பாதியில் முன்னிலையில் இருந்து ஜெர்மனி தோற்றது இப்போதுதான். இதற்கு முன்பு உலகக் கோப்பையில் முதல் பாதியில் முன்னிலையில் இருந்து 20 ஆட்டங்களை வென்று ஓர் ஆட்டத்தை டிரா செய்துள்ளது. 

* கடந்த இரு உலகக் கோப்பைப் போட்டிகளிலும் ஆசியக் கால்பந்து கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளிடம் ஜெர்மனி தோற்றுள்ளது. 2018-ல் முதல் ஆட்டத்தில் தென் கொரியாவிடம் தோற்றது. இந்த இரு தோல்விகளுக்கு முன்பு ஆசியக் கால்பந்து கூட்டமைப்பைச் சேர்ந்த எந்த ஒரு நாட்டிடமும் உலகக் கோப்பையில் ஜெர்மனி தோற்றதில்லை. 

* கடைசியாக விளையாடிய 3 பெரிய போட்டிகளிலும் ஜெர்மனி முதல் ஆட்டத்தில் தோற்றது. 2022. 2018 உலக கோப்பைகளைத் தவிர யூரோ 2020-ல் பிரான்ஸிடம் தோற்றது. 

* உலகக் கோப்பையில் விளையாடிய ஆசிய அணிகளில் முதல்முறையாக (ஜப்பானைச் சேர்ந்த) இரு மாற்று வீரர்கள் கோலடித்துள்ளார்கள். 

* உலகக் கோப்பையில் இரு முன்னாள் சாம்பியன்களும் முதல் ஆட்டத்தில் தோற்றிருப்பது இது நான்காவது முறை. இதற்கு முன்னால்2014, 2002, 1982-ல் இதுபோல நடந்துள்ளது. 

* உலகக் கோப்பையில் ஆசிய அணிகள் முதலில் பின்தங்கி பிறகு வெற்றி பெறுவது இது 5-வது முறை. சமீபத்தில் ஆர்ஜென்டீனாவுக்கு எதிராக இதே பாணியில் சவூதி அரேபியா வென்றது. 

* 2018 உலகக் கோப்பையில் ஓர் ஆட்டம் மட்டுமே டிராவில் முடிவடைந்தது. ஆனால் 2022 உலகக் கோப்பையில் இதுவரை மட்டுமே 3 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com