உலகக் கோப்பை: 5-வது நாளின் சுவாரசியமான புள்ளிவிவரங்கள்!

அதனால் தான் கோலடித்தவுடன் அவர் கொண்டாடவில்லை.
உலகக் கோப்பை: 5-வது நாளின் சுவாரசியமான புள்ளிவிவரங்கள்!

2022 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் ஆட்டங்களில் அனைத்து அணிகளும் தங்களுடைய முதல் ஆட்டத்தை விளையாடி விட்டன. ஈகுவடார், நெதர்லாந்து, இங்கிலாந்து, சவூதி அரேபியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான், பெல்ஜியம், பிரேசில், ஸ்விட்சர்லாந்து, போர்ச்சுகல் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. முன்னாள் உலக சாம்பியன்கள் ஆர்ஜென்டீனாவும் ஜெர்மனியும் தங்களுடைய முதல் ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளன. 

5-வது நாளன்று நடைபெற்ற ஆட்டங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள்:

* அனைத்து அணிகளும் தங்களுடைய முதல் ஆட்டத்தை விளையாடியுள்ளன. இதுவரை ஓர் அணியும் ரெட் கார்ட் வாங்கவில்லை. 1986-க்குப் பிறகு இப்போதுதான் இதுபோல நடந்துள்ளது. 

* 5 ஆடவர் உலகக் கோப்பைப் போட்டிகளிலும் கோலடித்த முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.  போர்ச்சுகளைச் சேர்ந்த 37 வயது ரொனால்டோ, 2006-ல் தனது முதல் கோலை அடித்தார். தனது நாட்டுக்காக 118 கோல்களை அடித்துள்ளார். 2006, 2010, 2014, 2018, and 2022 என ஐந்து உலகக் கோப்பைப் போட்டிகளிலும் ரொனால்டோ கோல்களை அடித்துள்ளார். மகளிர் உலக கோப்பைகளில் இருவர் 5 உலகக் கோப்பைகளில் கோலடித்துள்ளார்கள். ரொனால்டோ, மெஸ்சி, லோதர் மாத்தாஸ், ஆண்டோனியா கார்பஜால், ரஃபேல் மார்கேஸ் ஆகியோர் மட்டுமே 5 ஆடவர் உலகக் கோப்பைகளிலும் விளையாடியுள்ளார்கள். 

* போர்ச்சுகலுக்காக உலகக் கோப்பையில் விளையாடிய வீரர்களில் கோலடித்த மூத்த வீரர் ரொனால்டோ. 37 வருடங்கள், 292 நாள்கள். போர்ச்சுகலுக்காக கோலடித்த இளம் வீரரும் ரொனால்டோ தான்.

* 5 உலகக் கோப்பையிலும் 8 கோல்களை அடித்துள்ளார் ரொனால்டோ. அந்த 8 கோல்களும் குரூப் ஆட்டங்களில் அடித்தவை.

* முதல் ஆட்டத்திலேயே அற்புதமான கோலை அடித்துள்ளார் பிரேசிலின் ரிச்சர்லிசன். செப்டம்பர் 2018 முதல் பிரேசில் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். அன்றிலிருந்து இதுவரை அனைத்து போட்டிகளிலும் சேர்த்து 19 கோல்களை அடித்துள்ளார். இந்தக் காலக்கட்டத்தில் வேறு எந்த பிரேசில் வீரரும் இத்தனை கோல்களை அடித்ததில்லை. 

* உருகுவே - தென் கொரியா அணிகள் விளையாடிய ஆட்டம் கோலின்றி டிரா ஆனது. இந்த உலகக் கோப்பையில் இது 4-வது 0-0 டிரா. வேறு எந்த உலகக் கோப்பையிலும் குரூப் சுற்றில் முதல் ஆட்டங்களின் முடிவில் கோலின்றி இத்தனை டிராக்கள் ஏற்பட்டதில்லை. 

* குரூப் ஆட்டங்களில் 465 நிமிடங்களுக்கு இதுவரை கோல் எதுவும் அடிக்கவிடாமல் தடுத்துள்ளது உருகுவே அணி. கடைசியாக 2014-ல் உருகுவேக்கு எதிராக குரூப் ஆட்டத்தில் இங்கிலாந்து 1 கோல் அடித்துத் தோற்றது. 2018-ல் குரூப் ஆட்டங்களில் எதிரணிகளை ஒரு கோலும் அடிக்கவிடவில்லை உருகுவே. தற்போது முதல் ஆட்டத்திலும் அதே நிலை தொடர்ந்துள்ளது. அதாவது உலகக் கோப்பையில் உருகுவேவின் கடைசி 5 குரூப் ஆட்டத்தில் எந்த எதிரணியும் கோல் அடித்ததில்லை. அடுத்த ஆட்டத்தில் பலம் பொருந்திய போர்ச்சுகல்லை எதிர்கொள்கிறது உருகுவே. 

* கேமரூன் உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 8 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. 2014, 2010 உலகக் கோப்பைகளில் விளையாடிய 6 ஆட்டங்களிலும் 2002-ல் விளையாடிய ஒரு ஆட்டத்திலும் அந்த அணி தோல்வியடைந்துள்ளது. நேற்றைய ஆட்டத்திலும் தோல்வி. கடைசியாக பெற்ற வெற்றி 2002-ல், சவூதி அரேபியாவை 1-0 என வென்றது. தற்போது அடுத்த ஆட்டத்தில் செர்பியாவுக்கு எதிராக விளையாடுகிறது கேமரூன். உலகக் கோப்பையில் மெக்சிகோ அணி அதிகபட்சமாகத் தொடர்ச்சியாக 9 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. 

* கேமரூனுக்கு எதிராக கோலடித்த பிரீல் எம்போலோ, கேமரூனில் பிறந்தவர். தான் பிறந்த நாட்டுக்கு எதிராக முதல்முதலாக விளையாடி அந்த நாட்டுக்கு எதிராகவே கோலடித்து விட்டார். அதனால் தான் கோலடித்தவுடன் அவர் கொண்டாடவில்லை. அணி வீரர்கள் தான் அமைதியாக நின்றிருந்த எம்போலாவைக் கட்டி அணைத்துக் கொண்டாடினார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com