17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்: இங்கிலாந்து அணி விவரம்

17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. 
17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்:  இங்கிலாந்து அணி விவரம்

17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2005ஆம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்பின் தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானுடன் அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்கள் இன்று (நவம்பர் 27) இஸ்லமாபாத் வந்தடைந்தனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 1 ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. 2ஆவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 9 ஆம் தேதி முல்தானிலும், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி கராச்சியிலும் நடைபெற உள்ளது.  

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளே மோதின. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கடந்த உலகக் கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தது. நியூசிலாந்து தனது ஒரு நாள் தொடரை போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ரத்து செய்துவிட்டு பாகிஸ்தானில் விளையாடாமல் தாயகம் திரும்பியது. இதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. இங்கிலாந்தின் இந்த டெஸ்ட் தொடருக்கான சுற்றுப் பயணத்திற்கு முன்பும் இங்கிலாந்து அணியின் பாதுகாப்பு குறித்து கருத்தில் கொள்ளப்பட்டது. அதற்கு காரணம் அண்மையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட தூப்பாக்கிச் சூடு தாக்குதலே ஆகும்.

இதற்கிடையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான தனது போராட்டம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணிக்கு எந்த ஒரு பாதிப்பும் அளிக்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜாவிடம் உறுதியளித்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை அணி தாக்கப்பட்ட பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் பாதுகாப்பானது அல்ல என பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்தன. அதனால்,தங்கள் அணியினரை பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனைவரும் தயங்கினர். இந்த 17 ஆண்டு கால இடைவெளியில் பாகிஸ்தான் இரு முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை நடத்தியுள்ளது.

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது: பாகிஸ்தானில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பல ஆண்டுகள் ஆகிறது. தொடர் தொடங்குவதுக்கு முன்னதாக நாங்கள் அபுதாபியில் பயிற்சி எடுத்துள்ளோம். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நிகழ்ந்தது குறித்து கவலை இருக்கிறது. இருப்பினும், எங்களுடன் பாதுகாப்பு அதிகாரி ரெக் டிகாசன் இருக்கிறார். அவரது பாதுகாப்பான கரங்களில் நாங்கள் இருக்கிறோம் என்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணியின் இந்த பாகிஸ்தான் சுற்றுப்பயணம் முக்கியமானதாகப் பார்க்க்கப்படுகிறது. டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் 5ஆவது இடத்திலும், இங்கிலாந்து 7ஆவது இடத்திலும் உள்ளது. இந்தத் தொடருக்குப் பிறகு அதில் மாற்றம் ஏற்படலாம்.

பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோ ரூட், ஸாக் கிராலி, ஒல்லி போப்,பென் டக்கெட், லயம் லிவிங்ஸ்டன், பென் ஃபோக்ஸ், வில் ஜாக்ஸ், கீட்டான் ஜென்னிங்ஸ், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜேமி ஓவர்டன், ஒல்லி ராபின்சன், மார்க் வுட் மற்றும் ரிஹான் அகமது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com