2023 உலகக் கோப்பைக்கு நேரடித் தகுதி: ஒரு இடத்துக்குப் போட்டியிடும் 4 பெரிய அணிகள்!

ஒருநாள் சூப்பர் லீக் விதிமுறைப்படி 2023 உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற வேண்டுமென்றால்...
தென்னாப்பிரிக்க அணி
தென்னாப்பிரிக்க அணி

2023 ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய 6 அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்ற நிலையில் தற்போது 7-வது அணியாக ஆப்கானிஸ்தான் அணி நேரடியாகத் தகுதியடைந்துள்ளது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் வென்றது ஆப்கானிஸ்தான் அணி. நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் 115 புள்ளிகளை அடைந்து 7-ம் இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அணி 2023 உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது. இனி வரும் ஆட்டங்களில் அபராதம் காரணமாகக் கைவசமுள்ள புள்ளிகளை இழக்காமல் இருந்தாலே நேரடித் தகுதிக்கு எவ்விதச் சிக்கலும் ஏற்படாது. 

2023 உலகக் கோப்பைக்கு 8 அணிகளே நேரடியாகத் தகுதி பெற முடியும். ஆப்கானிஸ்தானுடன் 7 அணிகள் தற்போது தகுதி பெற்றுவிட்டதால் மீதமுள்ள ஓர் இடத்துக்காக தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகள் போட்டியிடவுள்ளன. இந்த 4 அணிகளில் எப்படியும் 3 அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடிய பிறகே 2023 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற முடியும்.

ஒருநாள் சூப்பர் லீக் விதிமுறைப்படி 2023 உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற வேண்டுமென்றால் 24 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி (சொந்த மண்ணிலும் வெளிநாடுகளிலும் 4 ஒருநாள் தொடர்கள், ஒவ்வொரு தொடரிலும் 3 ஒருநாள் ஆட்டங்கள்), 13 அணிகளில் முதல் 8 இடங்களைப் பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் தகுதிச்சுற்றில் விளையாட வேண்டும். 

தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகளில் எந்த அணி தகுதிச்சுற்று வரைக்கும் போகாமல் நேரடியாகவே தகுதி பெறப்போகிறது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com