இந்த வருட இறுதி வரை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டேன் எனப் பிரபல வீரர் ஜானி பேர்ஸ்டோ கூறியுள்ளார்.
கோல்ஃப் விளையாடும்போது ஏற்பட்ட காயத்தால் டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவால் இடம்பெற முடியாமல் போனது. மேலும் சமீபத்தில் முடிவடைந்த பாகிஸ்தானுக்கு எதிரான 7 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரிலும் அவர் விளையாடவில்லை.
காலில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பேர்ஸ்டோ தற்போது ஓய்வில் உள்ளார். இந்நிலையில் இன்ஸ்டகிராமில் தன்னுடைய காயத்தின் நிலை பற்றி பேர்ஸ்டோ கூறியதாவது:
அனைவருக்கும் என்னுடைய காயம் குறித்த தகவலை அளிக்கிறேன். அறுவைச் சிகிச்சை நல்லபடியாக நடைபெற்றது. 3 வாரங்கள் ஆகிவிட்டன. அடுத்த சில வாரங்கள், மாதங்கள் முக்கியமானவை. நான் எப்போது மீண்டும் விளையாட வருவேன் என்பதை இப்போதே கூற முடியாது. முதலில் இரு கால்களையும் நகர்த்த வேண்டும். எல்லாம் சரியாக வேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம், 2022-ல் நான் எதுவும் விளையாட மாட்டேன். 2023-ல் விளையாட காத்திருக்கிறேன் என்றார். இதனால் டிசம்பரில் பாகிஸ்தானுக்குச் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ இடம்பெற மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. கடைசியாக விளையாடிய 10 டெஸ்டுகளில் 6 சதங்கள் எடுத்துள்ளதால் பேர்ஸ்டோவின் வருகையை இங்கிலாந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.