5 அணிகள், 20 ஆட்டங்கள்: பிசிசிஐயின் மகளிர் ஐபிஎல் திட்டங்கள்!

மும்பை, கொல்கத்தா, தில்லி, ஆமதாபாத், சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களை முன்வைத்து...
5 அணிகள், 20 ஆட்டங்கள்: பிசிசிஐயின் மகளிர் ஐபிஎல் திட்டங்கள்!

ஐபிஎல் போட்டியின்போது மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் நடைபெறுவது வழக்கம். எனினும் இதர நாடுகளைப் போலவே இந்தியாவிலும் மகளிர் டி20 லீக் போட்டியை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

மகளிர் ஐபிஎல் போட்டியை அடுத்த வருடம் தொடங்குவது சரியாக இருக்கும். அது நிச்சயம் ஐபிஎல் போட்டியைப் போல பெரிய வெற்றியை அடையும் என்று கடந்த பிப்ரவரி மாதம் பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார். மகளிர் ஐபிஎல் போட்டி விரைவில் தொடங்கும், அதன் மதிப்பு அனைவரையும் திகைப்பூட்டும் விதத்தில் இருக்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் கூறினார். இந்திய மகளிர் அணி சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கம் வென்றது. இதனால் மகளிர் கிரிக்கெட் மீதான ஆர்வம் இந்திய ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஓய்வு பெற்ற மூத்த வீராங்கனை மிதாலி ராஜ், மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள மகளிர் ஐபிஎல் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மகளிர் ஐபிஎல் திட்டங்கள் பற்றி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

* மகளிர் டி20 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் பிப்ரவரி 26 அன்று நிறைவு பெறுகிறது. இதற்கு அடுத்ததாக மகளிர் ஐபிஎல் தொடங்கப்படும். 

* 5 அணிகள், ஒட்டுமொத்தமாக 22 ஆட்டங்கள், ஒவ்வொரு அணியிலும் 18 வீராங்கனைகள். ஆறு வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு அனுமதி. ஆட்டத்தில் விளையாடும் 11 வீராங்கனைகளில் 5 வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு அனுமதி வழங்கப்படும். அந்த 5 வீராங்கனைகளில் ஒரு வீராங்கனை அசோசியேட் நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 

* லீக் சுற்றில் 20 ஆட்டங்கள். ஒவ்வொரு அணியும் போட்டியில் உள்ள இதர அணிகளுடன் இருமுறை விளையாடும். லீக் சுற்றில் முதல் இடத்தைப் பிடிக்கும் அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும். 2-வது மற்றும் 3-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள் மீண்டும் மோதவுள்ளன. அதில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும். 

* இன்னும் அட்டவணை தயாராகவில்லை. எனினும் ஆடவர் ஐபிஎல் போட்டி தொடங்கும் முன்பு மகளிர் ஐபிஎல் போட்டி முடிவடைந்து விடும். மார்ச் இறுதியில் ஆடவர் ஐபிஎல் 2023 தொடங்கவுள்ளது. 

* உள்ளூர் வெளியூரில் ஒவ்வொரு அணியும் விளையாடும் விதமாக மகளிர் ஐபிஎல் போட்டியை நடத்த முடியாது. அப்படிச் செய்தால் குறைந்த எண்ணிக்கையிலான அணிகளைக் கொண்டு தினமும் ஆட்டத்தை நடத்த முடியாது. அதனால் ஓர் இடத்தில் முதல் 10 ஆட்டங்களும் மற்றொரு இடத்தில் அடுத்த 10 ஆட்டங்களும் நடைபெறலாம். 

* மும்பை, கொல்கத்தா, தில்லி, ஆமதாபாத், சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களை முன்வைத்து அணிகள் பிரிக்கப்படலாம். அல்லது மண்டல வாரியாகவும் பிரிக்கப்படலாம். 

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com