எல்லோரும் ஒருநாள் நிராகரிப்பை எதிர்கொள்வோம்: பிசிசிஐயை விட்டு வெளியேறும் கங்குலி பேச்சு!

யாராலும் வாழ்நாள் முழுக்க கிரிக்கெட் நிர்வாகியாகச் செயல்பட முடியாது என பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.
எல்லோரும் ஒருநாள் நிராகரிப்பை எதிர்கொள்வோம்: பிசிசிஐயை விட்டு வெளியேறும் கங்குலி பேச்சு!

யாராலும் வாழ்நாள் முழுக்க கிரிக்கெட் நிர்வாகியாகச் செயல்பட முடியாது என பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.

2019 அக்டோபரில் பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியும் செயலாளராக ஜெய் ஷாவும் தேர்வானார்கள். சமீபத்தில் பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி கங்குலி, ஜெய் ஷா ஆகிய இருவரும் தங்களுடைய பதவிகளில் மேலும் மூன்று வருட காலம் பணியாற்ற சந்தர்ப்பம் ஏற்பட்டது. எனினும் பிசிசிஐயின் தலைமைப் பொறுப்புகளில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. பிசிசிஐயில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலின் மூலம் தலைவர் பதவிக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி (67) தேர்வாகவுள்ளார். இதையடுத்து ஐசிசி தலைவர் பதவிக்கு செளரவ் கங்குலி போட்டியிட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பிசிசிஐ தலைவர் பதவியை விட்டு விரைவில் விலகவுள்ள செளரவ் கங்குலி, ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:

யாராலும் வாழ்நாள் முழுக்க கிரிக்கெட் நிர்வாகியாகச் செயல்பட முடியாது. எல்லோரும் ஒரு சமயத்தில் நிராகரிப்பை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். விரைவாக யாருக்கும் வெற்றி வந்து சேராது. மோடியாக, சச்சினாக, அம்பானியாக யாராலும் ஒருநாளில் ஆக முடியாது. கிரிக்கெட் நிர்வாகியை விடவும் கிரிக்கெட் வீரராகத்தான் என் வாழ்க்கை கடினமாக இருந்தது. நான் பிசிசிஐ தலைவாராக இருந்த மூன்று வருடங்களில் இந்திய கிரிக்கெட்டில் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. கரோனா காலத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தியுள்ளோம். இந்திய மகளிர் அணி காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது. வெளிநாடுகளில் இந்திய ஆடவர் அணி பல வெற்றிகளைப் பெற்றது. 

நான் ஏற்கெனவே சொன்னதுபோல என்னால் எப்போதும் கிரிக்கெட் நிர்வாகியாக இருக்க முடியாது. ஒரு கிரிக்கெட் நிர்வாகியாக என்னுடைய வாழ்க்கை இப்போது முடிவடையலாம். புதிய பதவியில் என்னைப் பார்க்கலாம். அந்தப் பொறுப்பையும் பூஜ்ஜியத்திலிருந்து தான் நான் ஆரம்பிக்க வேண்டும். சச்சின், டிராவிட் அணியில் இருந்தபோதே நான் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டேன். அதற்குக் காரணம், நான் கேப்டனாக இருந்து வீரர்களைச் சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான். ஒருமுறை அணியிலிருந்து டிராவிடை வெளியேற்ற முடிவு செய்தபோது அவருக்காக நான் போராடினேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com