கங்குலிக்கு எதிராக யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை: அருண் துமால்

பிசிசிஐ பொருளாளர் பதவியில் இருந்து வெளியேறி ஐபிஎல் தலைவராக பொறுப்பேற்கவுள்ள அருண் துமால், பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு எதிராக யாரும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கங்குலிக்கு எதிராக யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை: அருண் துமால்

பிசிசிஐ பொருளாளர் பதவியில் இருந்து வெளியேறி ஐபிஎல் தலைவராக பொறுப்பேற்கவுள்ள அருண் துமால், பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு எதிராக யாரும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

2019 அக்டோபரில் பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியும் செயலாளராக ஜெய் ஷாவும் தேர்வானார்கள். சமீபத்தில் பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி கங்குலி, ஜெய் ஷா ஆகிய இருவரும் தங்களுடைய பதவிகளில் மேலும் மூன்று வருட காலம் பணியாற்ற சந்தர்ப்பம் ஏற்பட்டது. எனினும் பிசிசிஐயின் தலைமைப் பொறுப்புகளில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. பிசிசிஐயில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலின் மூலம் தலைவர் பதவிக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி (67) தேர்வாகவுள்ளார். 

பிசிசிஐ தலைவராக மீண்டும் கங்குலி தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து பல விதமான செய்திகள் வலம் வந்தன. இதற்கிடையில், கங்குலியும் யாராலும் வாழ்நாள் முழுக்க கிரிக்கெட் நிர்வாகியாகச் செயல்பட முடியாது எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், பிசிசிஐ பொருளாளர் பதவியில் இருந்து வெளியேறி ஐபிஎல் தலைவராக பொறுப்பேற்கவுள்ள அருண் துமால், யாரும் கங்குலிக்கு எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை எனக் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது குறித்து அவர் பேசியதாவது: பிசிசிஐ அடுத்த தலைவர் மற்றும் பிற பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் வந்துள்ளன. அவர்கள் அனைவரும் போட்டியின்றி வருகிற அக்டோபர் 18ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ரோஜர் பின்னி கங்குலிக்குப் பிறகு அடுத்த பிசிசிஐ தலைவராக தேர்வாக உள்ளார். ஜெய் ஷா செயலாளராகவும், ராஜீவ் சுக்லா துணைத் தலைவராகவும் தேர்வாக உள்ளனர். இந்த அனைத்து முடிவுகளுமே கங்குலி அவர்களுக்கு தெரிந்து தான் எடுக்கப்பட்டது.

சுதந்திர இந்தியாவில் எவர் ஒருவரும் இதுவரை மூன்று ஆண்டுகளுக்கு மேல் பிசிசிஐ தலைவராக பதவி வகித்தது கிடையாது. ஆனால், ஊடகங்கள் சிலர் கங்குலி மீண்டும் பிசிசிஐ தலைவராக தேர்வாவதற்கு எதிராக உள்ளதாக தெரிவிக்கிறது. இது அர்த்தமற்றது. நாங்கள் யாரும் கங்குலிக்கு எதிராக ஒரு வார்த்தை எதிராக பேசியது கிடையாது. பிசிசிஐ கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்ட விதம் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் விதமாகவே இருந்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com