நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு அருகில் சென்ற நெதர்லாந்து!

தகுதிச்சுற்று ஆட்டத்தில் நமீபியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது நெதர்லாந்து அணி.
நெதர்லாந்து அணி (கோப்புப் படம்)
நெதர்லாந்து அணி (கோப்புப் படம்)

டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நமீபியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது நெதர்லாந்து அணி.

முதல் ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றி கண்டன. நெதர்லாந்து அணி ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது. இலங்கையைத் தோற்கடித்து ஆச்சர்யம் அளித்தது நமீபியா. 

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபியா கேப்டன் எராஸ்மஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இலங்கைக்கு எதிராக 163 ரன்கள் எடுத்த நமீபியா, நெதர்லாந்துக்கு எதிராக 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. ஜான் பிரைலிங் 43 ரன்கள் எடுத்தார். ஒரு பந்துவீச்சாளரைத் தவிர மற்ற அனைவரும் சிறப்பாகப் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினார்கள். இன்றைய ஆட்டத்தில் வெல்லும் அணி, சூப்பர் 12 சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு அதிகமாகும் என்பதால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல ஆட்டமும் கடைசி ஓவர் வரை சென்றது. 13-வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து இலக்கை நோக்கி நன்றாக சென்றுகொண்டிருந்தது நெதர்லாந்து. நடுவில் 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால் சரிவைச் சந்தித்தது. எனினும் நடுவரிசை வீரர் லீட் கடைசி வரை உறுதியாக நின்று வெற்றிக்கு வழிவகுத்தார். அவர் 30 ரன்கள் எடுத்தார். 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து 2-வது வெற்றியைப் பெற்றது நெதர்லாந்து. இன்னும் ஒரு ஆட்டமே மீதமுள்ள நிலையில் நெதர்லாந்து சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

அக்டோபர் 20 அன்று கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்து இலங்கையுடனும் நமீபியா ஐக்கிய அரபு அமீரகத்துடனும் மோதுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com