ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் மே.இ. தீவுகள் வெற்றி!
By DIN | Published On : 19th October 2022 05:01 PM | Last Updated : 19th October 2022 05:01 PM | அ+அ அ- |

ஹோல்டர் (கோப்புப் படம்)
ஜிம்பாப்வேவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த திங்களன்று ஸ்காட்லாந்துக்கு எதிராகத் தோற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது. முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வென்றது ஜிம்பாப்வே அணி.
டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. உடல்நலக்குறைவு காரணமாக ஜிம்பாப்வே கேப்டன் கிரைக் எர்வின் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. ரெஜிஸ் சகாப்வா கேப்டனாகச் செயல்பட்டார்.
9-வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என நல்ல நிலைமையில் இருந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. அதன்பிறகு தான் ஆட்டம் வேறு பாதையில் சென்றது. 13, 14-வது ஓவர்களில் ஒரேடியாக 4 விக்கெட்டுகளை இழந்தது. நன்கு விளையாடி வந்த ஜான்சன் சார்லஸ் 45 ரன்களில் ரன் அவுட் ஆனதால் நிலைமை இன்னும் மோசமானது. கேப்டன் நிகோலஸ் பூரன் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜிம்பாப்வேவின் சிகந்தர் ராஸா 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடைசி இரு ஓவர்களில் 26 ரன்கள் எடுத்ததால் ஓரளவு கெளரவமான ஸ்கோரைப் பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. கடைசிக்கட்டத்தில் ரோவ்மன் பவல் 28 ரன்களும் அகேல் ஹுசைன் ஆட்டமிழக்காமல் 23 ரன்களும் எடுத்து உதவினார்கள்.
ஜிம்பாப்வே அணி 18.2 ஓவர்களில் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. வெஸ்லி 27, லூக் 29 ரன்கள் எடுத்தார்கள். அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.