ஆடவர், மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு சம அளவில் ஊதியம்: பிசிசிஐ அறிவிப்பு!
By DIN | Published On : 27th October 2022 01:21 PM | Last Updated : 27th October 2022 01:21 PM | அ+அ அ- |

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள்
இந்திய ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான ஊதியம் வீராங்கனைகளுக்கும் இனிமேல் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று அறிவித்துள்ளார்.
இந்திய ஆடவர் கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் ஆட்டங்களுக்குத் தலா ரூ. 15 லட்சமும் ஒருநாள் கிரிக்கெட்டுக்குத் தலா ரூ. 6 லட்சமும் டி20 ஆட்டங்களுக்குத் தலா ரூ. 3 லட்சமும் பெற்று வருகிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் இதைவிடவும் குறைவான அளவில் ஊதியம் பெற்று வந்தார்கள்.
இந்நிலையில் ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சம அளவில் ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளும் இனிமேல் டெஸ்ட் ஆட்டங்களுக்குத் தலா ரூ. 15 லட்சமும் ஒருநாள் கிரிக்கெட்டுக்குத் தலா ரூ. 6 லட்சமும் டி20 ஆட்டங்களுக்குத் தலா ரூ. 3 லட்சமும் பெறவுள்ளார்கள். பிசிசிஐயின் இந்த அறிவிப்புக்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்துள்ளன.
எனினும் ஆடவர், மகளிர் ஒப்பந்தங்களில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. வருட ஒப்பந்தத்தில் உள்ள இந்திய வீராங்கனைகள் அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் பெறுகிறார்கள். ஆனால் ஏ பிளஸ் ஒப்பந்தத்தில் உள்ள இந்திய ஆடவர் அணியைச் சேர்ந்தவர்கள் ரூ. 7 கோடி பெறுகிறார்கள். எனவே இதிலும் சம அளவில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன.