அபிமன்யு ஈஸ்வரன், ரஜத் படிதார் சதங்களால் வலுவான நிலையில் இந்திய ஏ அணி
By DIN | Published On : 03rd September 2022 05:46 PM | Last Updated : 03rd September 2022 05:46 PM | அ+அ அ- |

ரஜத் படிதார்
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 4 நாள் ஆட்டத்தில் இந்திய ஏ அணி வீரர்கள் அபிமன்யு ஈஸ்வரன், ரஜத் படிதார் ஆகிய இருவரும் சதமடித்துள்ளார்கள்.
நியூசிலாந்து அணி ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடுகிறது.
பெங்களூரில் நடைபெறும் முதல் 4 நாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 110.5 ஓவர்களில் 400 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. ஜோ கார்டர் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய ஏ அணி வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணிக்கு வலுவான தொடக்கம் அமைந்தது. முதல் விக்கெட்டுக்கு பிரியங்க் பஞ்சாலும் அபிமன்யூ ஈஸ்வரனும் 123 ரன்கள் சேர்த்தார்கள். பிரியங் பஞ்சால் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2-ம் நாள் முடிவில் இந்திய ஏ அணி, 1 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. அபிமன்யு ஈஸ்வரன் 87, ருதுராஜ் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
3-ம் நாளான இன்று இந்திய ஏ பேட்டர்கள் சிறப்பாக விளையாடினார்கள் அபிமன்யு ஈஸ்வரன், ரஜத் படிதார் ஆகிய இருவரும் சதமடித்தார்கள். அபிமன்யு 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3-ம் நாள் முடிவில் இந்திய ஏ அணி, 124 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 492 ரன்கள் குவித்துள்ளது. ரஜத் படிதார் 170, திலக் வர்மா 82 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ரஜத் படிதார் 4 சிக்ஸர்களும் திலக் வர்மா 5 சிக்ஸர்களும் அடித்துள்ளார்கள். ரஜத் படிதார் 241 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 170 ரன்கள் எடுத்துள்ளார்.
29 வயது ரஜத் படிதார், 2015 முதல் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். கடந்த வருடம் ரூ. 20 லட்சத்துக்கு ஆர்சிபி அணி தேர்வு செய்தது. இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் படிதாரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. எனினும் போட்டி தொடங்கிய பிறகு ஆர்சிபி வீரர் சிஸ்சோடியாவுக்குக் காயம் ஏற்பட்டதால படிதாரை ரூ. 20 லட்சத்துக்கு மீண்டும் தேர்வு செய்தது ஆர்சிபி அணி. லக்னெளவுக்கு எதிரான பிளேஆஃப் ஆட்டத்தில் படிதார் அடித்த சதத்தால் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. 49 பந்துகளில் சதமடித்த படிதார், 54 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியில் இடம்பெறாத உள்ளூர் வீரர்களில் ஐபிஎல் பிளேஆஃப் போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். இதன்பிறகு ரஞ்சி கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் சதமடித்து மத்தியப் பிரதேச அணி கோப்பையை வெல்ல உதவினார். தற்போது நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராகவும் சதமடித்துள்ளார்.