கண்ணீருடன் அமெரிக்க ரசிகர்களிடமிருந்து விடை பெற்ற செரீனா வில்லியம்ஸ் (விடியோ)

ஆட்டம் முடிந்த பிறகு செரீனா வில்லியம்ஸைப் பேட்டியெடுத்தார் முன்னாள் அமெரிக்க வீராங்கனை...
கண்ணீருடன் அமெரிக்க ரசிகர்களிடமிருந்து விடை பெற்ற செரீனா வில்லியம்ஸ் (விடியோ)
Published on
Updated on
1 min read

யு.எஸ். ஓபன் போட்டியில் 3-வது சுற்றில் தோல்வியடைந்துள்ள 40 வயது செரீனா வில்லியம்ஸ் இத்துடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

சமீபத்திய தோல்விகளால் 24-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல முடியாமல் டென்னிஸிலிருந்து விடை பெற்றுள்ளார் செரீனா வில்லியம்ஸ். இதுவரை 23 பட்டங்களை வென்றுள்ள செரீனா, இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தால் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்திருப்பார். ஆனால் அந்த ஒரு பட்டத்துக்காகக் கடந்த ஆறு வருடங்களாக மிகவும் போராடினார். கடைசியாக, 2017-ல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். அதன்பிறகு நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் விளையாடியும் அவரால் வெற்றி பெற முடியாமல் போனது. இந்த வருட விம்பிள்டனில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார். இதன்பிறகு வோக் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில், யு.எஸ். ஓபன் போட்டிக்குப் பிறகு டென்னிஸிலிருந்து வெளியேறவுள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் யு.எஸ். ஓபன் போட்டியின் 3-வது சுற்றில் போட்டியிட்ட செரீனா வில்லியம்ஸ், ஆஸ்திரேலியாவின் அஜ்லாவிடம்  7-5, 6-7 (4/7), 6-1 எனத் தோல்வியடைந்தார். இதையடுத்து அவருடைய 27 வருட டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 

ஆட்டம் முடிந்த பிறகு செரீனா வில்லியம்ஸைப் பேட்டியெடுத்தார் முன்னாள் அமெரிக்க வீராங்கனையான மேரி ஜோ பெர்னாண்டஸ். அவருடைய பல கேள்விகளுக்குக் கண்ணீருடனே பதிலளித்தார் செரீனா. ரசிகர்கள், குடும்பத்தினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். கண்ணீருடன் அவர் பேட்டியளித்த காட்சி ரசிகர்களை மிகவும் நெகிழவைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.