ஒருநாள்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்த ஜிம்பாப்வே அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது ஜிம்பாப்வே அணி. 
ஜிம்பாப்வே கேப்டன்  சகாப்வா (கோப்புப் படம்)
ஜிம்பாப்வே கேப்டன் சகாப்வா (கோப்புப் படம்)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது ஜிம்பாப்வே அணி. 

ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியது. முதல் இரு ஆட்டங்களை எளிதாக வென்று தொடரை வென்றது ஆஸி. அணி. 3-வது ஒருநாள் ஆட்டம் டவுன்ஸ்வில்லியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

முழு பலம் கொண்ட ஆஸ்திரேலிய அணி எதிர்பாராதவிதமாக 31 ஓவர்களில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டேவிட் வார்னர் மட்டும் சிறப்பாக பேட்டிங் செய்து 94 ரன்கள் எடுத்தார். 11 பேட்டர்களில் இருவரைத் தவிர மற்ற பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் தான் ரன்கள் எடுத்தார்கள். 28 வயது சுழற்பந்து வீச்சாளர் ரையன் பர்ல், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

எளிதான இலக்கை விரட்ட ஜிம்பாப்வே தடுமாறினாலும் 39 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது. மருமணி 35 ரன்களும் கேப்டன் சகாப்வா ஆட்டமிழக்காமல் 37 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினார்கள். இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணியை ஜிம்பாப்வே அணி தோற்கடித்து வரலாறு படைத்துள்ளது. 1992-ல் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய ஜிம்பாப்வே, 30 வருடங்கள் கழித்து மீண்டும் விளையாட வந்து முதல் வெற்றியை அடைந்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com