எங்கே ஆர்ச்சர்?: ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!

இன்று அறிவிக்கப்பட்ட டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் இடம்பெறவில்லை.
எங்கே ஆர்ச்சர்?: ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!

டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

கடந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் 2021 போட்டியிலிருந்தும் விலகினார். காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார். பிறகு, முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். கடந்த மே மாதம் முழங்கை காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகிய முக்கியமான போட்டிகளிலிருந்து அவர் விலகினார். டிசம்பர் 11 அன்று முழங்கை காயத்துக்கு மற்றொரு அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ஆர்ச்சர். இதையடுத்து இங்கிலாந்து அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திலும் ஆர்ச்சர் இடம்பெறவில்லை. 

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி ஆர்ச்சரைத் தக்கவைக்கவில்லை. அறுவை சிகிச்சைகள் காரணமாக ஐபிஎல் 2022 போட்டியில் ஆர்ச்சர் பங்குபெறுவாரா என்கிற சந்தேகம் இருந்தது. ஐபிஎல் ஏலத்தில் ரூ. 8 கோடிக்கு ஆர்ச்சரைத் தேர்வு செய்தது மும்பை அணி. இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஆர்ச்சர் விளையாடவில்லையென்றாலும் அடுத்த வருடம் அவர் விளையாடுவார் என மும்பை அணி நம்பிக்கையுடன் உள்ளது. 

கடந்த 17 மாதங்களில் மூன்று அறுவைச் சிகிச்சைகள் செய்துகொண்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்குக் கடந்த மே மாதம் மீண்டும் காயம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் சில காலம் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் காயம் விரைவில் குணமாகி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் நிச்சயம் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

தற்போது மீண்டும் விளையாட ஆர்வமாக உள்ளேன். செப்டம்பரில் மீண்டும் பந்து வீச ஆரம்பிப்பேன். சர்வதேச கிரிக்கெட்டில் விரைவில் விளையாட உதவியாக இருக்கும். அக்டோபரில் டி20 உலகக் கோப்பை இருப்பதை மறந்து விட வேண்டாம் என்று கடந்த ஜூன் மாத இறுதியில் ஆர்ச்சர் தெரிவித்தார்.

ஆனால், இன்று அறிவிக்கப்பட்ட டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் இடம்பெறவில்லை. காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆர்ச்சர், முழு உடற்தகுதியைத் தற்போது அடைய முடியாது என்பதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது. 2023-ம் ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடுவதற்கான உடற்தகுதியை ஆர்ச்சர் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.     கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடாத ஆர்ச்சர், இந்த வருடப் போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்களுக்கு இந்தச் செய்தி ஏமாற்றமாக அமைந்துள்ளது. அடுத்த வருடம் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. அப்போட்டியில் ஆர்ச்சரின் வேகப்பந்து வீச்சைக் கண்டுகளிக்க அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com