நோ பால் வீசிய சுழற்பந்து வீச்சாளர்: வங்கதேச கேப்டன் அதிருப்தி

நோ பால் வீசிய சுழற்பந்து வீச்சாளர்: வங்கதேச கேப்டன் அதிருப்தி

பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இலங்கை அணி.

ஆசியக் கோப்பைப் போட்டியில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இலங்கை அணி.

துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. மெஹிதி ஹசன் மிராஸ் 38, ஆசிப் ஹுசைன் 39 ரன்கள் எடுத்தார்கள். பிறகு பேட்டிங் செய்த இலங்கை அணி, 19.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குசால் மெண்டிஸ் 37 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 

இந்த ஆட்டத்தில் இலங்கை அணி பந்துவீச்சாளர்கள் நோ பால், வைட் எதுவும் வீசவில்லை. ஆனால், 4 நோ பால்கள், 8 வைட்களை வீசியதால் மிகவும் பாதிக்கப்பட்டது வங்கதேச அணி. சுழற்பந்து வீச்சாளரான மெஹிதி ஹசன் 2 நோ பால்களை வீசினார். கடைசி ஓவரில் இலங்கை அணிக்கு 4 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நோ பால் வீசி வங்கதேச ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார் மெஹிதி ஹசன். 

தன்னுடைய அணியின் பந்துவீச்சு பற்றி வங்கதேச கேப்டன் ஷகில் அல் ஹசன் கூறியதாவது:

எந்த கேப்டனும் தனது பந்துவீச்சாளர்கள் நோ பால் வீசுவதை விரும்ப மாட்டார். ஒரு சுழற்பந்து வீச்சாளர் நோ பால் வீசுவது பெரிய குற்றம். நாங்கள் நிறைய வைட்கள், நோ பால்களை இந்த ஆட்டத்தில் வீசிவிட்டோம். நாங்கள் கட்டுப்பாட்டுடன் செயல்படவில்லை. அழுத்தம் ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும் என எங்களுக்குத் தெரியவில்லை. குசால் மெண்டிஸுக்கு நிறைய வாய்ப்பளித்து விட்டோம். சுழற்பந்து வீச்சாளர் நோ பால் வீசுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பொதுவாக எங்களுடைய சுழற்பந்து வீச்சாளர்கள் நோ பால்களை வீச மாட்டார்கள். இன்று அழுத்தமான தருணங்களில் தடுமாறி விட்டோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com