டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு, அதிரடி வீரருக்கு வாய்ப்பு!

இந்தியாவில் நடைபெறும் டி20 தொடரில் மட்டும் டேவிட் வார்னர் கலந்துகொள்ள மாட்டார்.
டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு, அதிரடி வீரருக்கு வாய்ப்பு!

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

பிரதான சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக பிரதான சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் 21 வரை நடைபெறும் முதல் சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, நமிபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 8 அணிகள் போட்டியிடும். பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை, இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் ஆகியவற்றுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் 26 வயது அதிரடி வீரர் டிம் டேவிட் தேர்வாகியுள்ளார். அவர் இதுவரை 14 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்தியாவில் நடைபெறும் டி20 தொடரில் மட்டும் டேவிட் வார்னர் கலந்துகொள்ள மாட்டார். அவருக்குப் பதிலாக கேம்ரூன் கிரீன் அணியில் இடம்பெறுவார். இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவில் செப்டம்பர் 20 முதல் 25 வரை நடைபெறவுள்ளன. 

ஆஸ்திரேலிய அணி (டி20 உலகக் கோப்பை & இந்தியா டி20 தொடர்)

ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ஜோஷ் இங்லிஷ் (விக்கெட் கீப்பர்), ஆஷ்டன் அகர்,மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேஸில்வுட், கேன் ரிச்சர்ட்சன். (இந்தியாவில் நடைபெறும் டி20 தொடரில் டேவிட் வார்னருக்குப் பதிலாக கேம்ரூன் கிரீன் இடம்பெறுவார். )
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com