பிரபலங்கள் வெளியேற்றம்: யு.எஸ். ஓபன் 4-வது சுற்றில் நடால் தோல்வி!

பிரபலங்கள் வெளியேற்றம்: யு.எஸ். ஓபன் 4-வது சுற்றில் நடால் தோல்வி!

காலிறுதிச் சுற்றில் நடால், ஃபெடரர், ஜோகோவிச், மெத்வதேவ் எனப் பிரபல வீரர்கள் யாரும் பங்கேற்காதது...
Published on

யு.எஸ். ஓபன் போட்டியில் பிரபல வீரர் நடால் 4-வது சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.

யு.எஸ். ஓபன் போட்டியின் 4-வது சுற்றில் நடாலும் அமெரிக்காவின் பிரான்சஸ் டியாஃபோவும் மோதினார்கள். இதற்கு முன்பு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தொடர்ச்சியாக 22 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தார் நடால். 2022-ல் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் போட்டிகளை வென்ற 36 வயது நடால், விம்பிள்டனில் அரையிறுதி வரை முன்னேறி உடல்நலக் குறைவு காரணமாகப் போட்டியிலிருந்து வெளியேறினார். இதனால் யு.எஸ். ஓபன் போட்டியின் 4-வது சுற்றில் நடாலின் வெற்றி அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது.  

இதற்கு முன்பு இருவரும் போட்டியிட்ட இரு ஆட்டங்களிலும் நடால் வெற்றி பெற்றிருந்தார். எனினும் மிகவும் சுறுசுறுப்பாக விளையாடிய 24 வயது டியாஃபோ, 6-4, 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி முதல்முறையாக யு.எஸ். ஓபன் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளார். 2006-க்குப் பிறகு யு.எஸ். ஓபன் போட்டியில் காலிறுதிக்குத் தகுதி பெற்ற அமெரிக்க இளம் வீரர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். 2022 யு.எஸ். ஓபன் காலிறுதிச் சுற்றில் நடால், ஃபெடரர், ஜோகோவிச், மெத்வதேவ் எனப் பிரபல வீரர்கள் யாரும் பங்கேற்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் புதிய இளம் வீரர்களின் வருகை புதிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. 2005-க்குப் பிறகு காலிறுதியில் நடால், ஃபெடரர், ஜோகோவிச் இல்லாமல் நடைபெறும் 2-வது யு.எஸ். ஓபன் போட்டி இது. 2020 போட்டியிலும் இதுபோல இம்மூவரும் காலிறுதியில் பங்கேற்கவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com