செஸ் போட்டியில் புதிய சர்ச்சை: பாதியில் விலகிய கார்ல்சன்!
By DIN | Published On : 06th September 2022 10:59 AM | Last Updated : 06th September 2022 11:03 AM | அ+அ அ- |

சர்வதேச செஸ் போட்டியிலிருந்து பாதியில் விலகி செஸ் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன்.
2022 சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் பங்கேற்றார். 3-வது சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது ஹான்ஸ் நீமேன், கார்ல்சனைத் தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து இந்தப் போட்டியில் நீமேன், 2.5 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தார். 1.5 புள்ளிகளுடன் கார்ல்சன் பின்தங்கியிருந்தார்.
இந்நிலையில் சின்க்ஃபீல்ட் போட்டியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார் கார்ல்சன். அவர் இதுவரை பங்கேற்ற எந்தவொரு போட்டியிலும் இதுபோல பாதியில் விலகியதில்லை. இதனால் கார்ல்சனின் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4வது சுற்று தொடங்கிய பிறகும் கார்ல்சன் விளையாட வரவில்லை. இதையடுத்து இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த ட்வீட்டில், அவர் ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார். அதில், இதுபற்றி நான் பேசினால் எனக்குப் பெரிய பிரச்னை ஏற்படும் என கால்பந்து பயிற்சியாளர் ஜோஸ் மரினோ பேசிய காணொளியை தனது ட்வீட்டுடன் சேர்த்து பகிர்ந்துள்ளதால் கார்ல்சனின் இந்த முடிவு புதிய சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
I've withdrawn from the tournament. I've always enjoyed playing in the @STLChessClub, and hope to be back in the future https://t.co/YFSpl8er3u
— Magnus Carlsen (@MagnusCarlsen) September 5, 2022