அர்ஷ்தீப் சிங்கை இழிவுபடுத்துவதா?: ஹர்பஜன் சிங் கண்டனம்

சமூகவலைத்தளங்களில் அர்ஷ்தீப் சிங் மற்றும் இந்திய அணியை மட்டமாக விமர்சனம் செய்வதைக் கண்டிக்கிறேன்.
அர்ஷ்தீப் சிங்கை இழிவுபடுத்துவதா?: ஹர்பஜன் சிங் கண்டனம்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சுலபமான கேட்சை நழுவ விட்டதால் சமூகவலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்.

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. கோலி 60 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி இலக்கை ரன்கு விரட்டி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஸ்வான் 71 ரன்களும் முகமது நவாஸ் 20 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 42 ரன்களும் எடுத்தார்கள். அதிரடியாக விளையாடிய முகமது நவாஸ், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் இன்னிங்ஸில் பரபரப்பான கட்டத்தில் ஆசிஃப் அலி வழங்கிய எளிதான கேட்சை ஷார்ட் தேர்ட்மேன் பகுதியில் நின்றிருந்த அர்ஷ்தீப் சிங் நழுவவிட்டார். இதையடுத்து சமூகவலைத்தளங்களில் அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். எனினும் கடைசி ஓவரில் நன்குப் பந்துவீசி பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளித்தார் அர்ஷ்தீப் சிங். கடைசியில் பாகிஸ்தான் இந்த ஆட்டத்தை வென்றது. 

சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தனி நாடு கோரி காலிஸ்தான் இயக்கம் என்ற அமைப்பு போராடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேட்சை நழுவவிட்டதால் அந்த இயக்கத்துடன் தொடர்புபடுத்தி அர்ஷ்தீப் சிங்கை இழிவுபடுத்தும் விதமாக சமூகவலைத்தளங்களில் பல பதிவுகள் எழுதப்பட்டுள்ளன. இதையடுத்து விராட் கோலி, ஹர்பஜன் சிங் உள்பட பல பிரபலங்கள் அர்ஷ்தீப் சிங்குக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்கள்.

சமூகவலைத்தளங்களில் ஹர்பஜன் சிங் கூறியதாவது:

அர்ஷ்தீப் சிங்கை விமர்சனம் செய்வதை நிறுத்துங்கள். யாரும் வேண்டுமென்றே கேட்சை நழுவ விட மாட்டார்கள். நமது வீரர்களை எண்ணி நாம் பெருமைப்படுகிறோம். பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியது. சமூகவலைத்தளங்களில் அர்ஷ்தீப் சிங் மற்றும் இந்திய அணியை மட்டமாக விமர்சனம் செய்வதைக் கண்டிக்கிறேன். அர்ஷ்தீப் சிங் தங்கம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com