கடைசிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி
By DIN | Published On : 08th September 2022 10:41 PM | Last Updated : 08th September 2022 10:46 PM | அ+அ அ- |

ஆசியக் கோப்பையின் இன்றையப் போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
இன்றையப் போட்டியில் ரோஹித் சர்மா இல்லாததால் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி களமிறங்கினர். அவர்கள் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.119 ரன்களுக்கு இந்திய அணி தனது முதல் விக்கெட்டினை இழந்தது. கே.எல்.ராகுல் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இதனையடுத்து, விராட் கோலியுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். அவர் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார். இருப்பினும், அதற்கு அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின், ரிஷப் பந்த் களமிறங்கினார்.
அரைசதம் கடந்த பிறகு விராட் கோலி ருத்ரதாண்டவம் ஆடினார். மைதானத்தின் நாலாபுறங்களிலும் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தன. அதிரடியாக ஆடிய அவர் 53 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 61 பந்துகளில் 122 ரன்கள் குவித்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். ரிஷப் பந்த் 16 பந்துகளில் 20 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது.
இன்றையப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் கடந்த 1000 நாட்களுக்கும் மேலாக சதமடிக்கவில்லை என்ற விமர்சனங்களுக்கும் விராட் கோலி முற்றுப் புள்ளி வைத்துள்ளார். இன்று அவர் அடித்த சதம் சர்வதேசப் போட்டிகளில் அவரது 71வது சதமாகும். மேலும் இது அவரது முதல் டி20 சதம் எனபதும் குறிப்பிட்டத்தக்கது.
அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் புவனேஷ்வர்குமாரின் 4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. 4 ஓவர்களில் 4 ரன்களை மட்டுமே கொடுத்தார் புவனேஷ். ஆப்கன் அணியில் அதிகபட்சமாக இப்ரஹிம் 64 ரன்களும், ரசித் கான் 15 ரன்களும், முஜீப் 18 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தது.
இந்திய அணியில் புவனேஷ் 5 விக்கெட்டுகள், அஸ்வின், அர்ஷ்தீப், தீபக் ஹூடா தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.
ஆசியக் கோப்பையில் இந்தியாவின் கடைசி போட்டி இதுதான். இறுதிப் போட்டியில் இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) மோதவிருக்கிறது.