ஆசியக் கோப்பை: இந்தியாவை வெளியேற்றிய இரு சிக்ஸர்கள்!
By DIN | Published On : 08th September 2022 11:22 AM | Last Updated : 08th September 2022 11:22 AM | அ+அ அ- |

வெற்றியைக் கொண்டாடும் நசீம் ஷா
கடைசி ஓவரில் 19 வயது பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா அடித்த இரு சிக்ஸர்களுக்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்துள்ளன.
ஷார்ஜாவில் நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையிலான பரபரப்பான டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ஞாயிறன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதவுள்ளன. பாகிஸ்தானின் வெற்றியால் ஆப்கானிஸ்தான், இந்தியா என இரு அணிகளும் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளன.
கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் இருந்தது ஒரு விக்கெட் மட்டுமே. 10-வது பேட்டராகக் களமிறங்கிய 19 வயது நசீம் ஷா, ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபரூகி வீசிய கடைசி ஓவரில் முதல் இரு பந்துகளிலும் சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தான் அணிக்கு அற்புதமான வெற்றியை வழங்கினார்.
நசீம் ஷாவின் பேட்டிங் பற்றி பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் கூறியதாவது:
இது டி20 கிரிக்கெட். நசீம் ஷா இப்படி பேட்டிங் செய்து நான் பார்த்துள்ளேன். எனவே எனக்கு ஓரளவு நம்பிக்கை இருந்தது. ஷார்ஜாவில் மியாண்டட் அடித்த சிக்ஸரை இது ஞாபகப்படுத்தியது என்றார்.