ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஆஸி. கேப்டன் ஓய்வு
By DIN | Published On : 10th September 2022 10:47 AM | Last Updated : 10th September 2022 10:47 AM | அ+அ அ- |

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கூறியுள்ளார்.
35 வயது ஃபிஞ்ச், ஆஸி. அணிக்காக 2011 முதல் 5 டெஸ்டுகள், 145 ஒருநாள், 92 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் கேப்டனாகவும் உள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் தொடர் நாளையுடன் முடிவடைகிறது. 2-0 என முன்னிலை பெற்று ஒருநாள் தொடரை வென்றுள்ளது ஆஸ்திரேலியா. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள கடைசி ஒருநாள் ஆட்டத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச் அறிவித்துள்ளார். எனினும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் அறிவித்துள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸி. அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த வருடம் 13 ஆட்டங்களில் விளையாடி 1 அரை சதத்துடன் 169 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் ஃபிஞ்ச். கடந்த 12 இன்னிங்ஸில் 5 முறை டக் அவுட் ஆகியுள்ளார். கடைசி 7 இன்னிங்ஸில் 26 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறியப்படுகிறது.